*குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழாவில் வேதனை
மஞ்சூர் : உணவு கலாச்சாரம் மாறி வருவது குழந்தைகளின் உடல் நலத்தை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது என குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழாவில் வேதனை தெரிவிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கீழூர் கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சிவக்குமார், லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் திமோத்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கலந்து கொண்டு குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: நாட்டில் இன்று பரவி வரும் நுகர்வு கலாச்சாரம் கடன், லஞ்சம், வரதட்சணை, சமுதாய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளது. மக்களை ஆடம்பர வாழ்க்கை வாழ வைக்கிறது. பிறந்தநாள் போன்ற அனைத்து நாட்களும் வணிக நோக்கம் கொண்டவையாக மாறியுள்ளது. கௌரவம் என்ற பெயரில் குப்பை உணவுகளை குழந்தைகள் உண்பதால் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற பொருளாதார கொள்கைகளுக்கு பிறகு மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாடு பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது.
விளம்பரங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு மக்கள் பொருள் தின்னிகளாக மாற்றப்பட்டுள்ளனர். கடன் வாங்குவது கௌரவமாக கருதப்படுகிறது. வீடுகள், பொருள் பாதுகாப்பு அறைகளாக மாறிப்போயுள்ளது. லஞ்சம், வரதட்சணை போன்ற சமூக தீமைகள் அதிகரித்து வருகின்றன.
சமுதாயத்தில் ஏற்ற, தாழ்வுகள் ஏற்பட்டு மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். உணவு கலாச்சாரம் மாறி வருவது குழந்தைகளின் உடல் நலத்தை பாதிப்படைய செய்துள்ளது. பிஸ்கட்டில் உள்ள சோடியம் பை கார்பனேட், சுக்ரோஸ் உடல் நலத்தை கெடுக்கும் டிரான்ஸ் கொழுப்பாக மாறக்கூடிய ஹைட்ரஜனேட்டட் கொழுப்பு நிற மூட்டிகள், மண மூட்டிகள் ஆகியவை குழந்தைகளை நோயாளிகளாக மாற்றி வருவதால் பிஸ்கட் குழந்தையின் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பு என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே அனைத்து பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இவ்வாறு குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுப்போம், லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் தடுப்போம் என மாணவிகள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் மன்ற பொறுப்பு ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
The post உணவு கலாச்சாரம் மாறி வருவதால் குழந்தைகளின் உடல் நலம் பாதிப்பு appeared first on Dinakaran.