×

தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த சச்சின் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்குவழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH 38 அமைந்துள்ளது.

இந்த சாலை தூத்துக்குடி – மதுரை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியில் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், வாகைகுளத்தில் உள்ள டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முறையாக இந்த சாலை பராமரிக்கப்படுவதில்லை.

சாலை குண்டும் குழியுமாக பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்கும் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் அரசு தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது? சாலை பணிகள் முழுமையடையாத போது சுங்கச்சாவடி வசூல் பணிகள் ஏன் துவங்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பதில் தாக்கல் செய்யும் காலம் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

The post தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Vagaikulam ,Thoothukudi – Nellai National Highway ,Madurai ,Thoothukudi-Nellai National Highway ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED பெயரை தேடி வில்லங்க சான்று வழங்க...