
வேலூர் : சென்னை மூர் மார்க்கெட்டை நினைவுப்படுத்தும் வகையில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வேலூர் சண்டே மார்க்கெட்டில் ₹1 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட் என்பது குண்டூசி முதல் புத்தகங்கள், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், பெரிய இயந்திர தளவாடங்கள் வரை கிடைக்கும் மார்க்கெட்டாகும். இவைகள் அனைத்தும் பழைய பொருட்கள் என்பதுதான் விசேஷம். அதேநேரத்தில் சென்னை மூர் மார்க்கெட் தினமும் நடைபெறும் வர்த்தக சந்தையாக விளங்குகிறது.
ஆனால் வேலூர் சண்டே மார்க்கெட் அதன் பெயருக்கேற்ப ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறுகிறது. வேலூர் அண்ணா பஜார், லாங்கு பஜாரில் ஒரு பகுதியில் மட்டும் இயங்கி வந்த வேலூர் சண்டே மார்க்கெட் தற்போது பில்டர்பெட் சாலை ஆசிரியர் இல்லம் வரை விரிவடைந்திருக்கிறது. ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வழிவழியாக இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
வேலூர் சண்டே மார்க்கெட்டின் வயது குறித்து கேட்டால், இது எப்போது தொடங்கியது என்பது தெரியாது என்கின்றனர் வியாபாரிகள். அதேநேரத்தில் எங்களுக்கு தெரிந்து இது 100 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் சந்தையாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இங்கு பழைய அரிய புத்தகங்கள், பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புகள், நவீன கால எழுத்தாளர்களின் புத்தகங்கள், பழைய பாடப்புத்தகங்கள், ஆங்கில இலக்கிய, இலக்கண புத்தகங்கள், தொழிற்சார்ந்த புத்தகங்கள், கலைக்களஞ்சியங்கள், நாவல்கள், வரலாற்று புதினங்கள், கணினி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் என அனைத்து வகை புத்தகங்களும் கிடைக்கிறது.
அதேபோல் பழங்கால கலையம்சம் நிறைந்த மரச்சாமான்கள், நாற்காலிகள், ஊஞ்சல்கள், மேசைகள், ஓவியங்கள், இரும்பு, பித்தளை, தாமிர உலோகங்களாலான வீட்டு சாமான்கள், இயந்திர தளவாடங்கள், உடற்பயிற்சி கருவிகள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், பயன்படுத்தப்பட்ட ஆடைகள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், ஹார்டு டிஸ்க்குகள், கீ போர்டுகள், இசைக்கருவிகள், சிபியுக்கள் என அனைத்தும் வேலூர் சண்டே மார்க்கெட்டில் கிடைக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த சந்தையில் பொருட்களை வாங்க உள்ளூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்தும் அதிகளவில் வருகின்றனர். மிககுறைந்த விலையில் தரம்மிக்க பழைய பொருட்கள் கிடைப்பதால் இந்த மார்க்கெட்டுக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் ஒரே நாளில் இங்கு வர்த்தகம் ₹1 கோடியை தாண்டி நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்றும் வேலூர் சண்டே மார்க்கெட்டில் ₹1 முதல் ₹1.25 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
The post சென்னை மூர் மார்க்கெட்டை நினைவுப்படுத்தும் ஒரே நாளில் ₹1 கோடி வர்த்தகம் நடைபெறும் வேலூர் சண்டே மார்க்கெட் appeared first on Dinakaran.