×

அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு

*சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி

ஊட்டி : அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறினார்.குன்னூர் ஊராட்சி ஒன்றியம் பர்லியார் ஊராட்சியில் ரூ.33.59 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள், பேரட்டி, வண்டிசோலை மற்றும் எடப்பள்ளி ஊராட்சி பகுதிகளில் ரூ.1.35 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், பர்லியார் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 2021-22 நிதி ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கரன்சி அங்கன்வாடி மைய கட்டிடம்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட ரேஷன்கடை கட்டிடம் என ரூ.33.59 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.

கரன்சி பகுதியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவர், வண்டிசோலை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சோலாடாமட்டம் சாலை பணி, பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நூலக பழுது பார்ப்பு பணி, சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் கல்குழி பகுதியில் கட்டப்பட்டு வரும் கிணறு ஆகிய பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து எடப்பள்ளி ஊராட்சியில் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திரா நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கு, ஆரக்கொம்பையில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி என ரூ.1.35 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர், பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பேரட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி சமையல் கூடம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில் கழிவுகள் சேகரிக்கும் பிக்அப் வாகனம் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக அளவில் முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளும் விதமாக பேரூராட்சிகள்,ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் ஆர்டிஒ., பூஷணகுமார், வட்டாட்சியர் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனகுமாரமங்கலம், ஆறுமுகம், ஊராட்சி தலைவர்கள் சுசீலா, ெஜகதீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tourism Minister ,Petty Ooty ,Ramachandran ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து...