×

குளிக்கச் சென்ற போது தர்மபுரி ஏரியில் மூழ்கி அக்கா, தங்கை பலி

*கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது

நல்லம்பள்ளி : தர்மபுரி அருகே, ஏரியில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி ஊராட்சி தம்மணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபாபதி(45). இவரது மகள்கள் சஞ்சனா(7), மோனிகா(6). இவர்கள் அருகிலுள்ள அரசு பள்ளியில் 3 மற்றும் 1ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களது மகன் தமிழ் இனியன்(3). நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அக்காள்- தங்கை வீட்டில் இருந்துள்ளனர்.

பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், நண்பகல் வேளையில் சிறிய சைக்கிளில், தம்பியுடன் இருவரும் விளையாடுவதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள ஏரி பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள், தம்பியை கரையில் உட்கார வைத்து விட்டு, இருவரும் தண்ணீருக்குள் இறங்கியுள்ளனர். அப்போது, திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற சஞ்சனா, ஏரியில் மூழ்கினாள். அதனைக்கண்டு பதறி துடித்த மோனிகா, அக்காவை காப்பாற்ற முயன்ற போது, அவளும் நீரில் மூழ்கினாள்.

ஏரியில் இறங்கிய சகோதரிகள் இருவரும், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், கரையில் அமர்ந்திருந்த தமிழ் இனியன் செய்வதறியாது அழுது கொண்டிருந்துள்ளான். அதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள், கனகசபாபதிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறியடித்துக்கொண்டு அங்கு சென்று பார்த்த போது, சைக்கிள் மட்டும் நின்றிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே, குழந்தைகள் கால்தடம் பதிந்திருந்த இடத்தை அடையாளம் கண்டு, அந்த வழியாக ஏரிக்குள் இறங்கி பார்த்தபோது, சஞ்சனா, மோனிகா ஆகிய இருவரும் தண்ணீருக்குள் சடலமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார். பின்னர், குழந்தைகளின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்,கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post குளிக்கச் சென்ற போது தர்மபுரி ஏரியில் மூழ்கி அக்கா, தங்கை பலி appeared first on Dinakaran.

Tags : Lake Darmapuri ,Akka ,Nallamampalli ,Nallampuri ,Darmapuri ,Aka ,
× RELATED கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கும் அக்கா