×

ஊட்டி எமரால்டு அருகே இறந்து கிடந்த 2 ஆண் புலிகளும் விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

*20 பேர் குழு தீவிர விசாரணை

*மோப்ப நாயுடன் ரோந்து

ஊட்டி : ஊட்டி எமரால்டு, அவலாஞ்சி அணை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த இரு புலியின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் தகனம் செய்யப்பட்டது. இவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் 20 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர். நீலகிரி வன கோட்டம், ஊட்டி தெற்கு வனச்சரகம், எமரால்டு நேருநகர் பாலம் அருகே அவலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் நீரோடை மற்றும் வனத்திற்குள் இரு புலிகள் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மர்மமான முறையில் புலிகள் உயிரிழந்தது தொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி முதுமலை கள இயக்குனர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில் முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

ஆய்விற்காக உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்ட பின் அவற்றின் புலிகளின் உடல்கள் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது. புலிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியின் அருகில் பசுமாட்டின் உடல் கண்ெடடுக்கப்பட்டதால் பசுமாட்டின் இறைச்சியில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணைைய தீவிரப்படுத்தி உள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:

எமரால்டு அருகே அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் வனப்பகுதியில் இறந்து கிடந்தது 8 வயது, 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலிகள் ஆகும். 8 வயது மதிக்கத்தக்க புலியின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை. கோரை பற்கள், நகங்கள் அப்படியே இருந்தன. மற்றொரு புலியின் முதுகெலும்பில் முறிவுகள், கழுத்து பகுதியில் வெளிப்புற காயங்கள் காணப்படுகிறது. வயிற்றில் முள்ளம்பன்றி முட்கள், முடி, இறைச்சி இருந்துள்ளது. இதனால் இந்த புலி மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்திருக்க வாய்ப்புள்ளது.

இரு புலியின் உடல் பாகங்கள் தடயவியல் மற்றும் நச்சுயியல் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டன. புலிகள் இறந்து கிடந்த இடத்தை சுற்றிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது அருகில் முழுவதும் அழுகி மட்கிப்போன நிலையில் பசு மாட்டின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் விஷம் தடவப்பட்டிருந்ததா? என கண்டறிய ஆய்விற்காக அவற்றின் பாகங்களும் சேகரிக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவற்றின் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.

நீலகிரி கோட்ட உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) தேவராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனச்சரகர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 20 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் ரோந்து மேற்ெகாண்டு வருகின்றனர். மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் விசாரித்து வருகின்றனர்’’ என்றார்.

The post ஊட்டி எமரால்டு அருகே இறந்து கிடந்த 2 ஆண் புலிகளும் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? appeared first on Dinakaran.

Tags : Ooty Emerald ,Ooty ,Avalanchi Dam ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...