×

மஞ்சூர் அருகே பசுந்தேயிலைக்கு விலை கேட்டு கடைகள் அடைப்பு; தொழிலாளர்கள் ஸ்டிரைக்

*3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

மஞ்சூர் : மஞ்சூர் அருகே பிக்கட்டியில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிரணயம் கோரி 3-வது நாளாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுதவிர தோட்டத்தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளனர். இந்நிலையில் தேயிலை விவசாயத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக பொருளாதார ரீதியாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும், மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.35 நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 3 நாட்களாக பிக்கட்டி பஜாரில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு குந்தை சீமை சின்னகனி கவுடரும், 14 ஊர் தலைவருமான போஜா கவுடர் தலைமை தாங்கினார். ஊர் தலைவர்கள் ராதாகிருஷ்ணன் (பிக்கட்டி), ஜெயகுமார் (ஒசையட்டி), அர்ஜூணன் (கெரப்பாடு), தங்கராசு (சிவசக்தி), சந்திரன் (குந்தா கோத்தகிரி), ரங்கராஜன், கர்ணன் (பாரதியார் புதூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

3 நாட்களுக்கு பசுந்தேயிலை விநியோகிப்பதில்லை என தெரிவித்தனர். போராட்டத்தில் பிக்கட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட தேயிலை விவசாயிகள், பொதுமக்கள் உள்பட நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தேயிலை விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று பிக்கட்டி சுற்றுவட்டார வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகிப்பதை விவசாயிகள் நிறுத்தி வைத்தனர். இதனால் பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பசுந்தேயிலை பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்டுள்ளது. தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மஞ்சூர் அருகே பசுந்தேயிலைக்கு விலை கேட்டு கடைகள் அடைப்பு; தொழிலாளர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Manjur ,Pikatti ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...