*வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு 9/6 செக்போஸ்ட் வழியே நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை,அமராவதி வனச்சரக பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை கோடை காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் வறட்சி காரணமாக இரை, தண்ணீர் தேடி அவ்வப்போது தமிழ்நாடு, கேரள எல்லையான சின்னாறு பகுதியில் சாலையை கடந்து அமராவதி அணைக்கு சென்று தாகம் தணிக்கின்றன.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாததால் வனப்பகுதியில் வறட்சி காணப்படுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உடுமலை-மூணார் செல்லும் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. 9/6 செக்போஸ்டுக்கும், சின்னாறு செக்போஸ்டுக்கும் இடையே சின்னாறு பகுதியில் சாலையோரம் குட்டியுடன் பெண் யானை ஒன்று அவ்வப்போது உலா வருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “குட்டியுடன் நிற்கும் பெண் யானைக்கு வாகன ஓட்டிகள் தொந்தரவு அளிக்கக்கூடாது. வாகனங்களில் செல்வோர் யானை அருகே சென்று ஹாரன் அடிக்கக்கூடாது. அமைதியாக காத்திருந்தால் யானை சாலையை கடந்து சென்றுவிடும். வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுப்பது, கூச்சல் போடுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது” என எச்சரித்துள்ளனர்.
The post சின்னாறு பகுதியில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை appeared first on Dinakaran.