×

பஸ் மோதி விவசாயி, மெடிக்கல் ரெப் பலி

*சிசிடிவி காட்சிகள் வைரல்

திங்கள்சந்தை : வில்லுக்குறி, திங்கள்சந்தை பகுதிகளில் நடந்த இரு விபத்துக்களில் அரசுபஸ் மற்றும் மினிபஸ் மோதி மெடிக்கல் ரெப் மற்றும் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகர்கோவில் அருகே பறக்கை கீழதெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (52). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் சேல்ஸ் ரெப்பாக வேலை பார்த்து வந்தார். அவருடன் என்ஜிஓ காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். 2 பேரும் வேலை விஷயமாக நேற்றுமுன்தினம் தக்கலை பகுதிக்கு வந்துவிட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்துகாத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார். மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பக்கம் மொபட்டில் உரசியது.இதில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்துகாத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்ஸின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்தபிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து முருகன் இரணியல் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியைச் சேர்ந்த சிந்துகுமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*திங்கள்சந்தை அருகே மாங்குழியை சேர்ந்தவர் வின்சென்ட் (65). விவசாயி. நேற்றுமுன்தினம் சொந்த வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு மதியம் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள்நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வின்சென்ட் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவசகாயம் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்டகுமார் (29) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் மோதி விவசாயி, மெடிக்கல் ரெப் பலி appeared first on Dinakaran.

Tags : Villukuri ,Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்