×

இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், திரு.இம்மானுவேல் சேகரனாரின் மகள் திருமதி.சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் திரு.சக்கரவர்த்தி ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் திரு. இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதனிடையே இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பரமக்குடியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வருக்கு இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்தார்.

The post இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Paramakkudi ,Emmanuel Gegaranar ,Chief Minister ,Muhammad. G.K. stalin ,Chennai ,Martyagi Emmanuel Gegeranar ,Thiruvuvuva ,Ramanathapuram district ,Paramakudi, ,Tamil Nadu Government ,Emmanuel Collector ,Thiruvu ,Paramakudi ,B.C. ,G.K. Stalin ,
× RELATED கரடு முரடான சாலையை சீரமைக்க வேண்டும்: கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தல்