
- திருவள்ளூர்
- பொன்னேரி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
- கற்பகம்
- சோத்துபெரும்பேடு
- பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி
- தின மலர்
திருவள்ளூர், செப். 11: பொன்னேரி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கற்பகம் சோத்துபெரும்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது அப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி சந்தியா 8ம் வகுப்பில் சேராமல் ஜூன் மாதம் முதல் கடந்த 3 மாதமாக பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் அந்த மாணவியை அவர் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடினார். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் எப்படியாவது மாணவியை கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்து மாணவி குறித்து விசாரித்து தேடிவந்தார்.
அப்போது, அந்த மாணவிக்கு தாய், தந்தை இல்லை என்பதும், காரனோடை பகுதியில் அவரது உறவினர் வீட்டில் தங்கி காரனோடை பகுதியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பாத்திர கடையில் வேலை செய்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் பேரில் பொன்னேரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில் வட்டார கல்வி அலுவலர்கள் முத்துலட்சுமி, சேகர் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மாணவி சந்தியாவை தேடி பாத்திர கடைக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த மாணவி சந்தியாவை சந்தித்து அவருக்கு அறிவுரைகள் கூறி பாத்திர கடையிலிருந்து அழைத்து வந்து நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கி திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து மாணவி சந்தியாவின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளின் ஆலோசனையின் படி மாணவியை பூந்தமல்லி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிறகு அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பில் மாணவி சந்தியாவை சேர்த்தனர். இடைநிறுத்தம் இல்லாமல் மாணவி படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மாணவியை தேடி அலைந்து கண்டுபிடித்து அவரை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்து பள்ளியில் மீண்டும் படிப்பதற்காக சேர்த்த பொன்னேரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் அவருடன் பணியாற்றிய அலுவலர்களையும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய சேர்மன் மேரி ஆக்சிலியா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
The post பாத்திரக்கடையில் வேலை செய்த மாணவி மீண்டும் பள்ளியில் சேர்ப்பு: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை appeared first on Dinakaran.