×

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் மும்முரம்

 

இளம்பிள்ளை, செப்.11: அரியானூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொம்பாடிபட்டி பிரிவில் மேம்பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே உள்ள கொம்பாடிபட்டி பிரிவு பகுதியில் அரசு சட்டக்கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வீடு, கடைகள், தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும், கல்பாரப்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையும் உள்ளது. இதனால் அதிகப்படியான வாகன போக்குவரத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்குள்ளானது.

மேலும் விபத்தில் உயிரிழப்பும், கை, கால் முறிவு ஏற்படுவது அதிகரித்தது. கல்லூரிகளுக்கு செல்பவர்கள் சாலையை கடக்க சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஆய்வு நடத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை இப்பகுதியில் ₹18.43 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை துவக்கியது. 400 மீ., நீளம், 30 அடி அகலத்தில் கொம்பாடி பட்டி பிரிவு பகுதியில் ஐந்தரை அடி உயரத்தில் இருவழிப்பாதை கொண்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

The post தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : National Highway ,Yumupillai ,Kompadipatti ,Aryanur ,Dinakaran ,
× RELATED ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...