×

திருச்சி மாநகரைவிட சென்னையில் காற்று மாசு பாதிப்பு அதிகம்: ஸ்வச் வாயு சர்வே அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ளது. அதேசமயம் திருச்சியில் காற்று மாசு பாதிப்பு குறைந்து காணப்படுவதாக ஒன்றிய அரசின் ஸ்வச் வாயு சர்வே மூலம் தகவல் வெளியாகி உள்ளன. காற்றுமாசுபாடு என்பது காற்றில் ஏற்படும் வேதியியல் அல்லது உயிரியல் மாற்றத்தை குறிப்பதாகும். தீங்கு விளைவிக்கும் வாயுக்கள், தூசி மற்றும் புகைகளினால் காற்று மாசுபடுகிறது. இது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே, தான் காற்று மாசு என்பது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தகூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன், 1 சதவீதம் கரியமில வாயுக்கள், மேலும் சில வாயுக்களும் உள்ளன. அதன்படி, அனைத்தும் சமநிலையில் இருந்தால் எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. ஆனால், இந்த வாயுக்களின் கலவையில் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்பட்டால் உயிர்வாழ்வதற்கே பிரச்னைகள் ஏற்படும் நிலைகள் தான் உண்டாகும். அதேபோல, அதிகரித்துவரும் வாகன பயன்பாடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பிரச்னை காரணமாகவும், காடுகள் அழிக்கப்படுவதாலும் ஓசோன் மண்டலத்தை அவை பாதிக்கிறது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் காற்று மாசுவால் அதிகளவில் பாதிக்கப்படும் நகரங்களின் பட்டியலை ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (ஸ்வச் வாயு சர்வே) ஒரு ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. மூன்று படி நிலைகளாக இந்த ஆய்வு அறிக்கை என்பது பிரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதல் படிநிலையில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பட்டியலில் 47 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் படிநிலையில் 3-10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பட்டியலில் 44 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, மூன்றாம் படிநிலையில் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பட்டியலில் 40 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, இந்த காற்று தர ஆய்வு முடிவுகளின்படி, 2023ம் ஆண்டின் 10 லட்சம் அதிகமான மக்கள் தொகை கொண்ட 47 நகரங்களின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 37வது இடத்தில் உள்ளது. இதில் திருச்சி மாநகரம் 6வது இடத்தில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 44வது இடத்தில் இருந்து சென்னை தரவரிசை மேம்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் கிரீன் பீஸ் இந்தியா அறிக்கையின் படி, நகரத்தின் சராசரி பி.எம்.10 செறிவு ஒரு கன மீட்டர் காற்றில் 45.9ஆக உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த பாதுகாப்பான அளவை விட3.1 மடங்கு அதிகமாகும். இந்த அளவிற்கு காற்று மாசு பாதிப்பிற்கு காரணமாக கடந்த ஓராண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டுமானம், மழைநீர் வடிகால் பணி, சாக்கடை மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்டவைகளால் சாலையில் தூசி அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரீன்பீஸ் இந்தியாவின் பிரசார மேலாளர் அவினாஷ் சஞ்சல் கூறுகையில்: வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகள் ஒன்றிய அரசு நிர்ணயித்த மாசு உமிழ்வு தர நிலைகளை பின்பற்றுவதில்லை. அதேபோல, வாகன புகை வெளியேறுதல், கழிவு பிரித்தல், கட்டிடங்களின் மாசு மற்றும் தொழில்துறை மாசு உள்ளிட்டவைகள் தான் சென்னை காற்றுமாசடைய முக்கிய காரணமாக உள்ளதாக கூறுகிறார். இதேபோல, பூவுலகின் நண்பர்களின் சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் கூறுகையில்:

சமீபத்தில் ஆய்வுகளின் படி 285.2 லட்சம் இருசக்கரவாகனங்கள் உட்பட தனியார் வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் காற்றுமாசு 27 சதவீதம் அதிகரித்து இருக்கக்கூடும். அதேபோல, மக்கள் தொகை காரணமாகவும் காற்று மாசை அதிகரிக்க வழிவகை செய்கிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாலும், பொதுமக்களும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

*காற்று மாசு பாதிப்பு உள்ள முக்கிய நகரங்கள் பட்டியல்
ஸ்வச் வாயு சர்வே வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் டெல்லி 9வது இடத்தையும், மும்பை 10வது இடத்தையும், கொல்கத்தா 33வது இடத்தையும், பெங்களூர் 25வது இடத்தையும், ஐதராபாத் 14வது இடத்தையும் பிடித்துள்ளன.

*காற்று மாசு காரணமாக ஏற்படும் நோய்கள்
காற்று மாசுபாடு மனிதர்களிடையே பல சுவாச கோளாறுகள் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். அதன்படி, நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து காணப்படுகின்றது. அதேபோல, அசுத்தமான பகுதிகளில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடுகிறது.

The post திருச்சி மாநகரைவிட சென்னையில் காற்று மாசு பாதிப்பு அதிகம்: ஸ்வச் வாயு சர்வே அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy Nagar ,Tamil Nadu, Chennai ,Trichy ,
× RELATED சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை...