×

நாட்டின் பெயரை மாற்றி வரலாற்றை அழிக்க முயற்சி இந்து மதத்திற்கும் பாஜவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை: பிரான்சில் ராகுல் கடும் தாக்கு

லண்டன்: ‘‘இந்து மதத்திற்கும் பாஜவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நாட்டின் பெயரை மாற்றி அவர்கள் வரலாற்றை அழிக்க முயற்சிக்கின்றனர்’’ என பாரிசில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெல்ஜியத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு நேற்று சென்றார். அங்குள்ள சயின்ஸ் பிஓ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய ராகுல் கூறியதாவது: நான் கீதையை படித்திருக்கிறேன். பல உபநிடதங்களை படித்திருக்கிறேன். பல இந்து புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் எதிலும் பாஜ கட்சி செய்கின்ற எந்த செயலும் இந்து மதத்தில் கூறப்பட்டதில்லை. முற்றிலும் எதுவுமே இல்லை. உங்களை விட பலவீனமானவர்களை பயமுறுத்த வேண்டும், தீங்கு செய்ய வேண்டும் என எந்த இந்து புத்தகத்திலும், கற்றறிந்த இந்துக்கள் மூலமும் நான் கேள்விப்பட்டதில்லை. எனவே இந்து தேசியவாதிகள் என்று அவர்களை கூறும் வார்த்தை முற்றிலும் தவறானது. அவர்கள் இந்து தேசியவாதிகள் அல்ல. இந்து மதத்திற்காக அவர்கள் எதையும் செய்ததில்லை. அதிகாரத்தை பெறுவதற்காக அவர்கள் எந்த விலையை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஒரு சிலரின் ஆதிக்கத்தை அவர்கள் விரும்புகிறார்கள். மற்றபடி அவர்களுக்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்மதமும் இல்லை.

தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மை மக்களை பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் தடுக்கின்றன. என்னைப் பொறுத்த வரை, ஒரு தலித் நபர் அல்லது ஒரு இஸ்லாமியர், பழங்குடி, உயர் சாதியை சேர்ந்தவர், இப்படி யாராக இருந்தாலும் அவர் தவறாக நடத்தப்படக் கூடிய, தாக்கப்படக் கூடிய இந்தியா, நிச்சயம் நான் விரும்பும் இந்தியா அல்ல. இந்த பிரச்னையை நேரடியாக எதிர்த்து போராட ஆழமான அரசியல், சமூக உணர்வு தேவை. அந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. இந்தியாவில் வன்முறை இருக்காது, அதிகார அடக்குமுறை இருக்காது என நாளை காலை பிரதமர் முடிவெடுத்தால் அத்தகைய எல்லா பிரச்னைகளும் அடங்கிவிடும். ஒரு தலைமை காட்டும் திசை தான் மக்களை வழிநடத்தும். ஆனால் இப்போது உள்ள நிலை என்னவென்றால், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான். இது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். இதைச் செய்பவர்கள், அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். நமது வருங்கால சந்ததியினருக்கு நம் வரலாற்றை தெரியவிடாமல் அழிக்க முயல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post நாட்டின் பெயரை மாற்றி வரலாற்றை அழிக்க முயற்சி இந்து மதத்திற்கும் பாஜவுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை: பிரான்சில் ராகுல் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Hindu ,Baja ,Rahul ,France ,London ,Hinduism ,Dinakaran ,
× RELATED பழநியில் பெண் அதிகாரியுடன் தகராறு:...