
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாட்டில் தற்போது வெப்பசலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. சில இடங்களில் வெப்ப நிலை குறைந்து காணப்பட்டாலும், பல இடங்களில் வெப்பதாக்கம் அதிகமாகவே இருந்தது.
அதன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர்,வேங்கூர் ஆகிய பகுதிகளில் 50மிமீ மழை பெய்துள்ளது. மாடாம்பூண்டி 40மிமீ, தண்டராம்பட்டு, மங்கலபுரம், எடப்பாடி, மணலூர்பேட்டை, சங்ககிரி, ராசிபுரம், புதுச்சத்திரம் 30மிமீ, தேவக்கோட்டை, அய்யம்பேட்டை, பாப்பாரப்பட்டி, வல்லம், சிவகங்கை, சின்னகல்லார், திருமானூர் 20மிமீமழை பெய்துள்ளது. இந்நிலையில், பரங்கிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
மேலும், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கரூர், வேலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவே வெப்ப நிலை உணரப்பட்டது.இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் 16ம் தேதி வரை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
The post தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.