×

மீன் விலை குறைந்ததால் அலைமோதிய மக்கள் கூட்டம்: வஞ்சிரம் ரூ.800, கொடுவா ரூ.500க்கு விற்பனை

சென்னை: காசிமேட்டில் வரத்து அதிகரிப்பால் மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதனால், மீன்களை வாங்க அதிகளவில் கூட்டம் அலைமோதியது. ஒருகிலோ வஞ்சிரம் ரூ.800க்கும், கொடுவா ரூ.500க்கும் விற்பனை செய்யப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் பிரஷ்ஷாகவும், மிகுந்த சுவையுடையதாகவும் இருக்கும் என்பதால் வார இறுதி நாட்களில் இங்கு மீன்களை வாங்க மக்கள் வருவது வழக்கம். இதில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இங்கு மீன்களை வாங்க ஏராளமானோர் குவிந்துவிடுவது வழக்கமாக மாறிவிட்டது.

ஆடி மாதம் முழுவதும் மீன் பிரியர்கள் அதிகளவில் வந்தனர். ஆனால் ஆடி முடிந்தவுடன் கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்த்த அளவுக்கு இங்கு கூட்டம் இல்லாமல் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. இந்தநிலையில் அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதையொட்டி நேற்று மக்கள் கூட்டம் காசிமேட்டில் நிரம்பி வழிந்தது. மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்ததால் நேற்று குறைந்த விலையிலேயே மீன்கள் விற்கப்பட்டன.

ரூ.1,400 முதல் ரூ.1,800 வரை என உச்சத்தில் இருந்த வஞ்சிரம் மீன் விலை நேற்று கிலோ ரூ.700 முதல் ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. வவ்வால் (வெள்ளை) மற்றும் கொடுவா ரூ.500க்கும், சிறிய வவ்வால் ரூ.400க்கும், சீலா ரூ.350க்கும், சங்கரா, பாறை, நண்டு, கடமா (பெரியது) ரூ.300க்கும், இறால் ரூ.250க்கும், நவரை, காணங்கத்தை, நெத்திலி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் காலை வரை மீன் பிரியர்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். விற்பனை அதிகரித்ததால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மீன் விலை குறைந்ததால் அலைமோதிய மக்கள் கூட்டம்: வஞ்சிரம் ரூ.800, கொடுவா ரூ.500க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Alaimotiya ,Alaimotia ,Godua ,
× RELATED ஆடி அம்மாவாசையை முன்னிட்டு திருச்சி...