
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜி20 மாநாடு புதுடெல்லியில் நடந்து முடிந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ள நிலையில், மாநாட்டில் பயங்கரவாதத்தை வேரறுத்தல், தரமான கல்வி, தொழில்நுட்ப மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல், நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுசூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கை கோள் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் புதிய பொருளாதார பெருவழிப்பாதை அமைப்பது குறித்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். உலகையே இணைக்கும் வகையில் புதிய வர்த்தக பாதை அமைப்பதோடு, அதற்காக இந்தியா- மேற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் வருங்காலத்தில் ஐரோப்பாவிற்கு கப்பலிலும், ரயிலிலும் செல்ல வழிபிறக்கும். மின்சாரம், ஹைட்ரஜன் குழாய்கள், இணைய சேவைக்கான கேபிள்களையும் கூட இணைத்திடலாம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இதில் இடம் பெறும் நாடுகளில் வர்த்தகம் வளரும். எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொடர்புகள் மேம்படும். நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகள் உருவாகும். பிரதமர் மோடி மாநாட்டில் கூறியது போல கண்டங்களை கடந்த ஒற்றுமைக்கும் கூட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பது இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் மைய பொருளாகும்.
ஒரே பூமி அதிலும் புதிய பூமி உருவாக வேண்டுமானால் கண்டங்களுக்கு இடையே இத்தகைய இணைப்புகள் அவசியமாகும். மிகவும் வெளிப்படையாகவும், உயர்ந்த தரத்துடனும், எவ்வித மறைமுக நோக்கமும் இல்லாமல் செயல்படுத்தப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். உலகம் முழுவதிலும் வர்த்தகத்தையும், தனது ஆதிக்கத்தையும் வலுப்படுத்த சீனா ஏற்னவே பொருளாதார பட்டுப்பாதை திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பல நாடுகளில் நீர்வழிப்பாதைகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, வர்த்தக பாதையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் ‘பெல்ட் அன்ட் ரோடு’ என்னும் திட்டத்தின் கீழ் ஒரே பாதை, ஒரே சாலை என்னும் திட்டத்தை செயல்படுத்தி, சீனா பல நாடுகளுக்கு சாலை போக்குவரத்தையும் மேம்படுத்தி வருகிறது. ஜி20 மாநாட்டில் தற்போது போடப்பட்டுள்ள புதிய வர்த்தக பாதை திட்டமானது, சீனாவுக்கு நிச்சயம் சவால் அளிக்கும். இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியத்தை இணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவுக்கு ஒருவித பயமும் உருவாகும். புதிய வர்த்தக பாதை திட்டத்தால் இந்தியா- ஐரோப்பா இடையிலான வர்த்தக உறவுகள் 40 சதவீதம் வேகமாக வளரும் என கூறப்படுகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் கிடைப்பதிலும் தேவையற்ற சிரமங்கள் இருக்காது.
உலக நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு வலுவான இணைப்புகள் அவசியம் என கருதப்படும் நிலையில், இத்தகைய ஒப்பந்தத்தில் பல நாடுகள் விரைவாக இணையும் என்பதிலும் சந்தேகம் இல்லை. கண்டங்கள் மற்றும் நாகரிகங்கள் இடையிலான ஒரு டிஜிட்டல் பாலம் ஏற்படும்போது அசுர வளர்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. கொரோனாவை கடந்து நாடுகளிடையிலான பரஸ்பர நம்பிக்கைக்கு ஜி20 மாநாடு வழிவகுத்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் பொருளாதார பெருவழிப்பாதை திட்டம் வருங்காலத்திற்கான கலங்கரை விளக்கம் என்றே கொள்ளலாம்.
The post கண்டங்களை கடப்போம் appeared first on Dinakaran.