
சிவகங்கை: மதத்தின் பெயரால் மக்களிடையே பகைமையை, வெறுப்பை, பிரிவினையை ஒன்றிய அரசு தூண்டி விடுகிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையின் ஓராண்டு நிறைவு விழா பேரணி நேற்று நடைபெற்றது. ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்திய நாட்டின் சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு 4 ஆயிரம் கி.மீ நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டார். இந்த நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றிப் பயணம்.
நடைபயணத்தின் மூலம், அனைவரும் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உணர்வு நாட்டின் 140 கோடி மக்களிடம் ஏற்பட்டது. நம்மிடையே பிரிவினையை, வேற்றுமையை வளர்ப்பதற்கு பல சக்திகள் முன் வந்திருக்கின்றன. இந்த சக்திகளுக்கு தலைமை பீடமாக ஒன்றிய அரசே உள்ளது என்பது தான் வெட்கக்கேடு. ஒன்றிய அரசே மதத்தின் பெயரால் மக்களிடையே பகைமையை, வெறுப்பை, பிரிவினையை தூண்டி விடுகிறது.
எவ்வளவு வல்லரசாக இருந்தாலும் மக்களின் பலத்தை சந்திக்கும் போது அரசு பணியத்தான் வேண்டும். அரசு பணியும் என்பதற்கு இடைத்தேர்தல் முடிவு தான் சாட்சி. 7 இடங்களில் 4 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் பாஜவை முறியடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்திய மக்களின் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற சபதத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மதத்தின் பெயரால் பகைமையை ஒன்றிய அரசே தூண்டி விடுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.