×

மது, கஞ்சா வாங்கி கொடுக்கும்படி மிரட்டி அடித்து துன்புறுத்தியதால் ரவுடி கொலை: கைதான 5 பேர் ‘திடுக்’ தகவல்கள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரி தாக்கியது. பின்னர் அவரது தலையை தனியே வெட்டி, 7 கிமீ தூரத்தில் உள்ள கிராமத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவு 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிடிபட்ட 5 பேரிடம் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே வெண்குடி பகுதியை சேர்ந்தவர், பிரபல ரவுடி அஜித் (25). இவர்மீது வாலாஜாபாத், சாலவாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு, கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கஞ்சா போதைக்கு அடிமையான ரவுடி அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன் முத்தியால்பேட்டை, செல்லியம்மன் நகரில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா போதையில் அத்துமீறி புகுந்து அடிதடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இப்புகாரின்பேரில் வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி அஜித்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் கடந்த மாதம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு ரவுடி அஜித்தை செல்போனில் ஒரு மர்ம கும்பல் தொடர்பு கொண்டு மதுவிருந்துக்கு அழைத்தது. செல்போனில் அழைத்தவர் நண்பர் என்பதால், ஏற்கெனவே கஞ்சா போதையில் இருந்த ரவுடி அஜித், செல்போனில் குறிப்பிட்ட வள்ளுவப்பாக்கம் காலனி பகுதிக்கு கிளம்பி சென்றிருக்கிறார். அங்கு அந்த மர்ம நபர்கள் ரவுடி அஜித்துக்கு மது விருந்து அளித்துள்ளனர். இதில் ரவுடி அஜித் முழு போதையில் இருந்தபோது, அவரது தலையை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வீச்சரிவாளால் தனியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் அவரது உடலை வள்ளுவப்பாக்கத்திலும், அவரது தலையை சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ள தாங்கி கிராமத்திலும் போட்டுவிட்டு, அந்த மர்ம கும்பல் காரில் தப்பி சென்றது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு தனித்தனியே கிடந்த ரவுடி அஜித்தின் தலை மற்றும் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, எஸ்பி சுதாகர், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகர் தீவிரமாக விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே இக்கொலை தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தந்த சுங்கச்சாவடி பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடும்படி மாவட்ட எஸ்பி சுதாகர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் போலீசாரின் சோதனையில், அவ்வழியே காரில் வேகமாக ராஜம்பேட்டை விக்னேஷ் (22), குமரன் (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களை கைது செய்து, வாலாஜாபாத் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, பிடிபட்ட 2 பேரையும் நேற்றிரவு வாலாஜாபாத் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதேபோல் வாலாஜாபாத் அருகே பூச்சிவாக்கம் பகுதியில் மறைந்திருந்த அதே பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (22), ஆதிகேசவன் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து, பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். விசாரணையில், இறந்துபோன ரவுடி அஜித் (25) அடிக்கடி எங்களை தாங்கி கிராமத்துக்கு தனித்தனியே வரவழைத்து மது, கஞ்சா வாங்கி கொடுக்கும்படி மிரட்டி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நாங்கள் பயன்படுத்தும் பைக், செல்போன் ஆகியவற்றை அபகரித்து விற்றுவிடும் நிலை நீடித்தது. இதனால் ரவுடி அஜித்தை தீர்த்து கட்டவேண்டும் என 5 பேரும் முடிவு செய்தோம். இதைத் தொடர்ந்து ரவுடி அஜித்தை கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு மதுவிருந்துக்கு அழைத்தோம்.

எங்களை நம்பி வந்த அஜித்தை, வல்லுவபாக்கத்தில் மது விருந்து வழங்கி முழு போதையில் 5 பேரும் சேர்ந்து தலையை வெட்டி கொலை செய்தோம். பின்னர் சுமார் 7 கிமீ தொலைவில் எங்களை அடித்து துன்புறுத்திய பகுதியான தாங்கி கிராமத்தில் ஏற்கெனவே சூளுரைத்தபடி, அவரது தலையை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டோம் என்று 5 பேரும் வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து, இன்று நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் 4 பேரை சிறையிலும் 17 வயது சிறுவனை சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

The post மது, கஞ்சா வாங்கி கொடுக்கும்படி மிரட்டி அடித்து துன்புறுத்தியதால் ரவுடி கொலை: கைதான 5 பேர் ‘திடுக்’ தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Rowdy ,WALLAJAPHAD ,Walajabad ,Roudi ,
× RELATED பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை: போலீசார் விசாரணை