
சென்னை: அதிமுக மதுரை மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வராத மாவட்ட செயலாளர்களுக்கும், முறையாக வழிநடத்தாமல் இருந்த மாநாட்டு குழுவினருக்கும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையாக திட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநாட்டு குழுவினர், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது, அதேபோல, ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற விவகாரத்தை ஒன்றிய அரசு தற்போது கையில் எடுத்துள்ளது.
அதனை வரவேற்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அவை சாத்தியமா? இல்லையா? என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்கான யூகங்கள் என்ன என்பது குறித்தும், அதிமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் வண்ணம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு மாவட்டங்கள் என 100-ல் இருந்து அதற்கு மேற்பட்ட மாவட்ட பதவிகளை உயர்த்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தேர்வு செல்லும் என உயர்நீதிமன்றத்தால் சமீபத்தில் வெளியான தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து ஏற்கனவே, நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களை நிரப்புவதற்கான ஆலோசனையும் நடைபெற்றது. இதுமட்டுமின்றி, 13 மாவட்ட செயலாளர்களை மாற்றுவதற்கான முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், அதிமுக நடத்திய மதுரை மாநாடு என்பது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வலம் வர முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உணவுகளை வீண் செய்தது தான். அந்தவகையில் இந்த விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மாநாட்டிற்கென அமைக்கப்பட்ட குழுவினரின் சரியான திட்டமிடல் இல்லாமல் உணவுகளை வீண் அடித்தது, மாநாட்டிற்கு வந்தவர்களை முறையாக கவனிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் இபிஎஸ் காதுகளுக்கு ஏற்கனவே
சென்றிருந்த நிலையில் இது குறித்து இன்றைய கூட்டத்தில் மாநாட்டு குழுவினரிடம் கேட்டு கடுமையாக கோபமடைந்துள்ளார். அதேபோல, மாநாட்டிற்கான ஆட்களை அழைத்துவர மாவட்ட செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’ காற்றில் பறக்கவிட்ட காகிதம் போல விட்டுவிட்டதால் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததையும் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மேலும் அப்செட் ஆகியதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இதன் காரணமாக தான் சென்னை உட்பட 13 மாவட்ட செயலாளர்களை மாற்றும் முடிவில் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
The post சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; மதுரை மாநாட்டு குழுவினருக்கு ‘டோஸ்’ விட்ட இபிஎஸ்: 13 மாவட்ட செயலாளர்களை மாற்ற முடிவு என தகவல் appeared first on Dinakaran.