×

வல்லநாடு சரணாலயம் அருகே விதிமுறைகளை மீறி ஆழ்துளை கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சிக் கடத்தும் லாரிகள்: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

செய்துங்கநல்லூர்: வல்லநாடு சரணாலயம் அருகே விதிமுறைகளை மீறி ஆழ்துளை கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி லாரிகளில் கடத்திச் செல்வதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பாளை. அருகே வல்லநாட்டில் அமைந்துள்ள சரணாலயம் மற்றும் வனப்பகுதியில் சுமார் 243 வெளிமான்கள், 47 புள்ளிமான்கள், 30 கடமான்கள் மற்றும் முள்ளம்பன்றி, எறும்பு திண்ணி, உடும்பு, மலைப்பாம்பு, கீரிப்பிள்ளை, குள்ளநரி, காட்டு முயல், மரநாய் உட்பட மேலும் 86 வகையான பறவையினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இச்சரணாலயம் அருகேயுள்ள வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு வல்லநாடு மலைப்பகுதி அடிவாரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இதேபோல் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் அளித்த புகாரின் பேரில் அப்போதைய மாவட்ட கலெக்டராக இருந்த ரவிக்குமார் ஆய்வு செய்து 4 ஆழ்துளை கிணறுகளுக்கு உடனடியாக சீல் வைத்து தண்ணீர் எடுக்க தடை விதித்தார். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் பருவமழை பொய்த்த காரணத்தினால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் சீலை அகற்றி தற்போது மீண்டும் அந்த இடத்தில் தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சி தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் எடுத்துச் சென்று தூத்துக்குடியில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளுக்கும் இங்கிருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் கூறுகையில் ‘‘வல்லநாடு வன சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வனப்பகுதியில் மரங்கள், விலங்குகள் பாதிக்கப்படுவதால் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு நோக்கத்திற்கு பெறப்பட்ட மின்சாரத்தை ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படுவதால் மின்சார இணைப்பை துண்டித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வைத்த சீலை உடைத்து அனுமதி இல்லாமல் தண்ணீர் திருடுவது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

The post வல்லநாடு சரணாலயம் அருகே விதிமுறைகளை மீறி ஆழ்துளை கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சிக் கடத்தும் லாரிகள்: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Vallanadu Sanctuary ,Dudunganallur ,Vallanadu ,Dinakaran ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...