×

பருவமழை ஏமாற்றியதால் மண் திட்டாக மாறிய பேச்சிப்பாறை அணை: பயிர்கள் பாதிப்பு

குலசேகரம்: குமரி மாட்டத்தின் முக்கியமான நீராதாரம் பேச்சிப்பாறை அணை. 48 அடி நீர்மட்டம், 100 சதுரமைல் நீர்பிடிப்பு பரப்பளவை கொண்டது. இந்த அணை குமரி மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள், நிலத்தடி நீராதாரம் போன்றவற்றிற்கு உயிர் நாடியாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 77 அடி நீர்மட்டம் உடையது. இந்த இரண்டு அணைகளின் நீர் இருப்பை பொறுத்து குமரி மாவட்டம் மற்றும் ராதாபுரம் தாலுகா விவசாயம் அமையும். அதோடு பல்லுயிரின வாழ்விடமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையின் செழுமைக்கும் உயிரினங்களின் பாதுகாப்பாகவும் இந்த அணைகள் உள்ளன.

இந்த அணைகளில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் இரண்டு போக நெல்விவசாயம் மற்றும் இதர விவசாயங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்து வந்ததால் அணைகள் நிரம்பி வழிந்தது. அணைகளிலிலிருந்து உபரிநீர் திறக்கப்படும் சூழல் இருந்தது. இதனால் வெள்ள சேதம் ஏற்பட்டதுடன் பெருமளவு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

வெள்ள சேதங்களால் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்ய அரசு அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் நிலவும் மே மாதத்தில் வெப்பசலனம், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதுடன் நீர்நிலைகளுக்கு அதிக அளவு தண்ணீரும் வந்து சேரும்.

ஆனால் இந்த ஆண்டு கோடை மழை இல்லை. இதனால் அக்னி நட்சத்திரம் குமரி மாவட்டத்தை வாட்டி வதைத்தது. அதன்பின்னர் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழையின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் சில நாள் சாரல் மழையோடு தென்மேற்கு பருவமழை ஏமாற்றியது. தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு குமரி மாவட்டத்தில் இல்லாமல் போனது. தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவுள்ள மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

பருவமழையை எதிர்பார்த்து வழக்கம்போல் தொடங்கப்படும் விவசாயப்பணிகள் ஜூன் மாதம் துவங்கியது. ஆனால் பருவமழை ஏமாற்றியதால் அணைகளிலிலிருந்து வரும் தண்ணீரை எதிர்நோக்கி இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அக்னி வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெயில் கொளுத்தியது. தொடர்ச்சியாக அணைகளிலிலிருந்து பாசன கால்வாய்கள் வழியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமா குறைந்தது. கடல் போல் காட்சியளித்த அணைகள் தண்ணீரின்றி குட்டைகள் போன்று காட்சியளிக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகள் முழுவதும் வறண்டு மண் திட்டுகளாக மாறி மைதானம் போல் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் பரந்து விரிந்த நீர் பிடிப்பு பகுதி கிரிக்கெட் மைதானம் போன்றுள்ளது. கடும் வெயில் காரணமாக குமரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ரப்பர் மரங்கள் பட்டு போகும் நிலை உருவானது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் முறைவைத்து கால்வாய்களில் தண்ணீர் விடப்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது.

இது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. மலைபகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று அதிகரித்தது. மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாரல் மழையாகவே உள்ளது. இதனால் போதிய அளவு அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. மழையால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் மட்டும் சற்று உயர்ந்துள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 18.40 அடியாக இருந்தது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக இருந்தது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.

கால்வாய் சீரமைப்பால் தண்ணீர் திறக்கவில்லை
* குமரி மேற்கு மாவட்ட பகுதிக்கு பாசன வசதியளிக்கும் சிற்றார் பட்டணக்கால்வாயில் கடந்த சில மாதங்களாக பராமாரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் இந்த கால்வாயில் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் 18 அடி நீர்மட்டம் கொண்ட சிற்றார்1, சிற்றார் 2 அணைகளின் நீர்மட்டம் பெரிய அளவு குறையவில்லை.
* சிற்றாறு 1 அணை 11.28 அடியாகவும், சிற்றாறு 2 அணை 11.38 அடியாகவும் உள்ளது. வரும் நாட்களில் மழைபொழிவு ஏற்பட்டால் மட்டுமே அணைகளின் நீர்மட்டம் உயரும். விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் சூழல் ஏற்படும்.

தடுப்பணைகள் கட்ட வேண்டும்
குமரி மாவட்டத்தின் முக்கியமான ஆறுகளான கோதையாறு, பரளியாறு ஆகிய இரண்டும் மூவாற்றுமுகம் பகுதியில் ஒன்றாக இணைந்து குழித்துறை தாமிரபரணியாக தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. இதில் கோதையாற்றின் குறுக்கே திற்பரப்பில் தடுப்பணை, பரளியாற்றின் குறுக்கே அணைகரை பகுதியில் தடுப்பணை, தாமிரபரணியின் குறுக்கே குழித்துறையில் தடுப்பணை உள்ளது.

இந்த ஆறுகள் மூலம் மழைக்காலங்களில் பெருமளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை ஓரளவு சேமிக்கவும் நிலத்தடி நீராதாரத்தை அதிகரிக்கவும் இந்த ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பமாக உள்ளது.

The post பருவமழை ஏமாற்றியதால் மண் திட்டாக மாறிய பேச்சிப்பாறை அணை: பயிர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Speakroom dam ,Kulasekaram ,Kumari district ,Speakhra Dam ,Speakhouse Dam ,Dinakaran ,
× RELATED குலசேகரம் அருகே வீட்டில் இருந்து...