×

மிளகாயில் நோய், பூச்சி தாக்குதலை ஈஸியாக கட்டுப்படுத்தும் முறைகள்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரி ஆலோசனை

சிவகாசி: மிளகாயில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்தும், கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மிளகாயினை விவசாயிகள் அதிகளவு பயிரிடுகின்றனர். சீதோஷ்ணம் மாறுபடுவதால் நோய் மற்றும் பூச்சிதாக்குதலுக்கு ஏதுவான சூழ்நிலை நிலவுதாலும், விவசாயிகள் நோய் மற்றும் பூச்சி தடுப்பிற்கான முன்னேற்பாடுகளை பின்பற்றிட தோட்டக்கலைதுறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மிளகாய் பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சிதாக்குதலுக்கான அறிகுறிகள், முன்னேற்பாடுகள், ஒருங்கிணைந்த மேலாண்மைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது: காய்த் துளைப்பான்: இளம்புழுக்கள் மற்றும் வளர்ந்த பச்சை நிறப் புழுக்கள் மிளகாய் செடிகளில் இலைகள் மற்றும் காய்களை உண்டு சேதம் விளைவிக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டேருக்கு குளோரிபைரிபாஸ் 20 இசி 3 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது குயினால்பாஸ் 25இசி 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பரில் நனையும் தூள் மூன்று கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி எக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். கார்பரில் 1.25 கிலோ, அரிசி தவிடு 12.5 கிலோ, வெல்லம் 12.5 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் இவற்றை கலந்து விஷ உணவு தயாரித்து வைக்கவேண்டும்.

இலைப்பேன் :
இவைகள் செடிகளின் துளிர் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு பழுப்பு நிறமாகிப் பின் உதிர்ந்துவிடும். பூ மொக்குகளும் உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

அசுவினி :
இவைகள் இலைகளின் அடிப்பகுதியிலும், தளிர் இலைகளிலும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். இதனால் இலைகள் கீழ்நோக்கிக் குவிந்து காணப்படும். மேலும் தேன் போன்ற கழிவுப் பொருட்களை இவைகள் வெளியேற்றுவதால், எறும்புகள் அந்த இடங்களில் மொய்த்து ஒளிச்சேர்க்கைக்கு இலைகளின் பரப்பைக் குறைத்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது பாசலோன் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்

நோய்கள் :
இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய்:
இலைப்புள்ளி நோய் தாக்கிய மிளகாய் செடிகளின் இலைகளில் செம்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். அடிச்சாம்பல் நோய் தாக்கிய செடிகளின் இலைகளின் அடிப்பாகத்தில் சாம்பல் நிறப்பூசணம் காணப்படும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 25 கிலோ 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்கவேண்டும்.

பழ அழுகல் நோய்:
நுனிக்கருகலும், பழ அழுகலும் ஒரே பூசணத்தால் ஏற்படுகிறது. நுனிக்கருகல் பாதித்த செடிகள் மேலிருந்து கீழகாகக் காய்ந்திருக்கும். பழ அழுகல் நோய் தாக்கிய பழங்களில் செம்பழுப்பு நிறத்தில் வட்ட வடிவப் புள்ளிகள் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, மேங்கோசெப் 1 கிலோ அல்லது தாமிர ஆக்சிகுளோரைடு 1.25 கிலோ இவற்றை 500 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

தேமல் நோய்:
பாதிக்கப்பட்ட செடிகள் கரும்பச்சை மற்றும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள இலைகளுடன் வளர்ச்சி குன்றிக் காணப்படும். இந்நோய் பாதித்த செடிகளில் பூக்களோ, காய்களோ உண்டாகாமல் பெருத்த இழப்பை ஏற்படுத்தும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தும் மருந்துகளையே இதற்கும் உபயோகித்து நோய் பரப்பும் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம். ஐந்து வரிசை மிளகாய் பயிருக்கு 2 வரிசை சோளம் அல்லது மக்காச்சோளம் பயிரிட்டால் நோய் தாக்குதலைக் குறைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post மிளகாயில் நோய், பூச்சி தாக்குதலை ஈஸியாக கட்டுப்படுத்தும் முறைகள்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : chilli ,Sivakasi ,Visayas ,Chili ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை