×

நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் மொராக்கோ நாட்டில் 1,037 பேர் பலி: வீதிகளில் மக்கள் தஞ்சம்: புராதன சின்னங்கள் சேதம்

ரபாத்: மொராக்கோவில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 1,037க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொலைதூர கிராமங்களை மீட்பு படை சென்றடைவதில் சிக்கல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் மாரகேச் நகரில் இருந்து 70 கிமீ தொலைவில் அல் ஹோவுஸ் மகாணத்தின் இகில் நகருக்கு அருகே உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.11 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து 19 நிமிட இடைவெளியில் ரிக்டர் அளவில் 4.9 புள்ளிகளாக மற்றொரு நிலநடுக்கமும், தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

இதில் பல குடியிருப்புகள் சீட்டு கட்டு போல சரிந்தன. மாரகேச் மற்றும் அதை ஒட்டி உள்ள 5 மாகாணங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதில் 1,037 பேர் பலியானதாக மொராக்கோ உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 1,200 பேர் காயமடைந்துள்ளனர். அடுத்தடுத்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனாலும், தொலைதூர கிராமப்புறங்களுக்கு மீட்பு படையினர் செல்வது சிரமமாக உள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அட்லஸ் மலைப் பகுதிகளில் பல இடங்களிலும் பாறைகள் விழுந்து, சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் கிராமப்புறங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தில் மாரகேச் நகரமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள, நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கவுடோபியா மசூதி சேதமடைந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றான ‘சிவப்பு சுவரின்’ சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து உயிர் பிழைத்த பலரும் தங்கள் குழந்தைகள், குடும்பத்துடன் நிவாரண முகாம்களில் தவிக்கின்றனர். நிலநடுக்கத்தால் இறந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும், மொராக்கோவுக்கு உதவிக்கரமும் நீட்டி உள்ளனர்.

*ஆழமில்லாததால் அபாயகரமானது
இந்த நிலநடுக்கம் வெறும் 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கா வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இத்தகைய ஆழம் குறைவான நிலநடுக்கங்கள் மிகவும் அபாயகரமானவை. இதனால்தான், 6.8 ரிக்டர் அளவாக இருந்தாலும், அதிகப்படியான அதிர்வால் பல கட்டிடங்கள் சரிந்து, அதிகப்படியான உயிர்களை பலி வாங்கி உள்ளது.

*மோடி உதவிக்கரம்
டெல்லியில் ஜி20 மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, மொராக்கோ நிலநடுக்கத்தால் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘‘இந்த கடினமான நேரத்தில் முழு உலகமும் மொராக்கோவுடன் துணை நிற்கிறது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருக்கிறது’’ என்றார்.

*வரலாற்றில் முதல் முறை
வட ஆப்ரிக்காவில் பொதுவாக நிலநடுக்கம் ஏற்படுவது அரிதானது. அந்த வகையில், மொராக்கோ வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போதுதான் 6.8 ரிக்டர் அளவில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், 2004ல் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

The post நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் மொராக்கோ நாட்டில் 1,037 பேர் பலி: வீதிகளில் மக்கள் தஞ்சம்: புராதன சின்னங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Morocco ,Rabat ,Remote Village Rescue Team ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான...