×

இலை கட்சியின் நிழல் காக்கி அதிகாரியிடம் புகாரை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனி மாவட்டத்தில், பவர்புல்லான நிழல் நபர் காக்கி அதிகாரியை எதற்காக சந்தித்தாராம்…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட காக்கி அதிகாரி அலுவலகத்துக்கு இலைக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் புடைசூழ சேலம்காரரின் நிழலானவரு வந்தாராம். அவரு கொடநாடு வழக்கில், தன்னை விசாரிக்க சொல்லும் நபர் மீது புகார் கொடுத்தாராம். பிறகு வெளியே வந்தவரு, மிக ஆவேசமாக கொடநாடு வழக்கில் தன்னை பற்றியும், இலைக்கட்சி தலைவர்கள் பற்றியும் பொய்யான செய்தியை பரப்புகிறார்கள் என்று கொதிப்புடன் பேசினாராம். அங்கிருந்தால், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு நம்மை பிரச்னைகளில் சிக்க வைத்து விடுவாங்க என்று நினைத்து பதிலே சொல்லாமல் நடையை கட்டினாராம்.

எனினும் அங்கிருந்த நபர் ஒருவர், கொடநாடு வழக்கில் உங்களிடம் காக்கிகள் ஏற்கனவே விசாரிச்சாங்களாமே உண்மையா என்று கேள்வி கேட்டு அதிரடிச்சாராம். இந்த கேள்வியில் இருந்து தன் தலைவரை காப்பாற்ற அவரோட வந்திருந்த ஐடி பிரிவு நிர்வாகி ஒருத்தரு, பேசுனதெல்லாம் போதுமுன்னு கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாராம். அதே வேகத்தில் சேலம் காக்கி அதிகாரியின் ஆபீசில் இருந்து வந்த தடமே தெரியாத வகையில், அங்கிருந்து ஓட்டம் பிடித்தாராம். எங்க அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தால், வசமாக சிக்கிக் கொள்வோமுன்னு மனசுக்குள் வந்த பயம்தான் இந்த ஓட்டத்திற்கு காரணமாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரர் அணியினர் டெல்டாவில் அழுது புலம்பும் நிலையில் இருப்பது பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குக்கர் கட்சியின் தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளதாம். இது தேனிக்காரர் அணியில் உள்ள நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். ஒரு பக்கம் சேலம்காரர் கவிழ்த்துட்டார். இப்போது குக்கர்காரரும் கவிழ்த்துள்ளார். நாம மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்றால் எப்படி ஜெயிக்க முடியும். தேர்தலுக்கு நிற்பவர்களுக்கும், தேர்தல் செலவுக்கும் யார் கரன்சியை கொடுப்பா என்று விவாதித்து வர்றாங்களாம். இன்னும் சிலரோ, குக்கருடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான் சரி… தனியாக நின்றால் தோல்வி என்பது நம் பக்கத்திலேயே இருக்கிறது என்பதை இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம் என்று சவால்விடும் வகையில் பேசுறாங்களாம்.

சமீபத்தில் குக்கர், தேனிக்காரர் இணைந்த நிலையில் திடீரென நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் தனித்து போட்டியிட முடிவு செய்தது அக்கட்சியினருக்கே பிடிக்கவில்லையாம். எந்த கட்சியிலும் கூட்டணி சேர முடியாத சூழ்நிலை உள்ளதால், குக்கர் கட்சியினர் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார்களாம். எனினும் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் இருப்பதால் வெயிட் அண்ட் சீ என்று கூறி தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்துகொண்டு கட்சி பணிகளில் இறங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தமிழகத்தின் கடைசியில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த காக்கிகள் நொந்து போய் உள்ளார்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டில் எங்க பிரச்னை நடந்தாலும், குமரியில் இருந்து தான் காவல் பணிக்கு காக்கிகளை கூண்டோடு அனுப்பி வைக்கிறாங்களாம். கடந்த மாதம் மட்டும் 18 இடங்களுக்கு குமரி போலீஸ் பாதுகாப்புக்கு போய் இருக்காங்களாம். வெளி மாவட்ட பாதுகாப்பு பணிக்கு மாதத்தில் 6 நாள் மட்டுமே உணவுப்படியாம். அதையும் சரியாக வழங்குவதில்லையாம். ஆனால், ஒவ்வொரு போலீசும் பத்து முதல் பதினைந்து நாள் பாதுகாப்பு பணிக்கு போய்விட்டு மனசே நொந்து போய் இருக்காங்களாம். மாவட்ட காவல் தலைமை அதிகாரி இதை கவனிச்சு போலீஸ் படும் இன்னல்களுக்கு தீர்வு செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களாம். உடம்பை கவனிங்க என்று ஒவ்வொரு முறை மீட்டிங்கின் போதும் அறிவுரை சொல்றாங்க.

ஆனால் இப்படி மாதத்தில் பாதி நாட்கள் வெளியூர் பாதுகாப்புக்கு போனா… எப்படி எங்க உடம்ப நாங்க கவனிக்க முடியும். 55 வயது முடிந்தவர்களை போட்டு பந்தாடுறாங்க என்று நொந்து போய் வேதனையுடன் சொல்றாங்களாம் காக்கிகள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பவுர்புல் பெண்மணியை ஜெயிக்க முயன்று தோற்றுப்போன காக்கி அதிகாரியை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பிறகு 1963ல் இருந்து முதல் துணை நிலை ஆளுநர் மாளிகையாக ராஜ்நிவாஸ் உள்ளதாம். ராஜ் நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்புகளுக்கும் பஞ்சமில்லையாம்.

தற்போது ராஜ்நிவாஸ் சேதமாகி இருப்பதால் பவர்புல் பெண்மணியின் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசு பரிந்துரையை கேட்டாங்களாம். அதையடுத்து, கடற்கரைச்சாலையில் கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் குடியிருப்பில் பவர்புல் பெண்மணி தங்கவும், அவரின் அலுவலகம், பவர்புல் பெண்மணி செயலகம் ஆகியவை கடற்கரை சாலையில் புதிதாக சீரமைக்கப்பட்ட மேரி நகராட்சி கட்டிடத்தில் செயல்படவும் முடிவும் எடுத்தாங்க. இந்நிலையில, கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான வடி சாராய ஆலை, வில்லியனூருக்கு சென்றுவிட்டதால் அந்த இடத்தை கடந்த கதர் ஆட்சியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அங்கு அதிநவீன தங்கும் விடுதிகள், ஓட்டல், கடைகள் கட்டப்பட்டதாம்.

கடற்கரையை ஒட்டி அதிநவீன வசதிகள் கொண்டு இருப்பதால் இதனை பவுர்புல் பெண்மணி சமீபத்தில் ஆய்வு செய்தபோது பிடித்துவிட்டதால் ஆளுநர் மாளிகையை இங்கு மாற்றும் யோசனையில் உள்ளாராம். இதுபோன்று தற்போதைய காவல்துறை தலைவர் அலுவலகமும் பழுதடைந்துள்ளதால், கடற்கரையை ஒட்டி உள்ள கட்டிடத்துக்கு மாற்ற அரசுக்கு டிஜிபியும் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளாராம்.

ஆனால் பவுர்புல் பெண்மணி, காவல்துறை தலைவர் அலுவலகத்தை கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதபடை மைதானத்தில் உள்ள அலுவலகத்துக்கு மாற்றி கொள்ளலாம்னு சொல்லிட்டாராம். நகரத்தையொட்டி உள்ள டிஜிபி அலுவலகமும் இருக்க வேண்டும் என அவரும் அழுத்தம் கொடுத்து வருகிறாராம்… ஆட்சி அதிகாரத்துக்கு இருந்த போட்டி இப்போது கட்டிடம் தொடர்பான போட்டி நடக்குது… இந்த போட்டியால இரண்டு தரப்பும் மக்களை மறந்துட்டாங்க என்று ஆளுங்கட்சியில் உள்ள சில தலைகள் பேசி வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சியின் நிழல் காக்கி அதிகாரியிடம் புகாரை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf Party ,wiki ,Yananda ,Mangani District ,Khaki ,Uncle ,Peter ,Mangani ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...