×

அரசு பணி தேர்வு தொடர்பான தகவல்களுடன் பதில் மனு: டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண்களை பெற்ற 4 பேரை தேர்ந்தெடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பி, விளக்கம் அளிக்க அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்க முயற்சித்துள்ளதாகவும், இது நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியதாக கருதவேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழு தகவல்களுடன், மனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை 19 தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம், ஆவண ஆதாரங்களுடன் முறையான விளக்க மனுவை தாக்கல் செய்ய தவறினால், நீதிமன்றத்திற்கு உண்மை தகவல்களை மறைத்தற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post அரசு பணி தேர்வு தொடர்பான தகவல்களுடன் பதில் மனு: டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Tirupur ,
× RELATED உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்...