×

தேவையற்ற வழக்குகளை தவிர்க்க சட்டங்கள் வழங்கும் உரிமை குறித்து மக்களுக்கு சொல்ல வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தல்

சென்னை: சட்ட உதவி என்பதை நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுமல்லாமல், அரசின் திட்டங்கள், சட்டங்கள் வழங்கும் உரிமைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் தன்னார்வ மூத்த வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான சட்டப் பணிகள் திட்டம், சமூகநல திட்டங்களுக்கான சட்ட உதவிகள் குறித்த திரட்டு வெளியீட்டு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான திட்டத்தையும், சமூகநல திட்டங்களுக்கான சட்ட உதவிகள் குறித்த திரட்டையும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றம், பல திட்டங்களில் முன்னோடியாக உள்ளது போல, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் சட்ட உதவி வழங்க மூத்த வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. இதை மற்ற மாநில உயர் நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். அதேபோல, அரசுத்தரப்பு, எதிர்தரப்பு, நீதிபதி என மூன்று தூண்களைக் கொண்ட நீதிபரிபாலன முறையில், சுதந்திரமான அரசுத்தரப்பு முக்கிய பங்காற்றுகிறது. திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க முடியாத எதிர்தரப்பினருக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர். ஜாமீன் பெற்றும், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சிறைகளில் நெரிசல் அதிகரித்து வருகிறது.

ஜாமீன் பெற்றவர்கள் வெளிவர உதவ வேண்டும். நாட்டில் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் தேவையற்ற வழக்குகளை தவிர்க்க முடியும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை களைய இரு பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். சட்ட உதவி என்பதை நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுமல்லாமல், அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து உதவ வேண்டும்.

தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பேசியதாவது: சட்ட உதவி வழங்க மூத்த வழக்கறிஞர்கள் முன்வந்துள்ள இந்த திட்டத்தை மற்ற உயர் நீதிமன்றங்களும் பின்பற்றும். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும், மக்களுக்கு அவர்களின் உரிமை பற்றி சொல்ல வேண்டியுள்ளது. நீதிமன்றங்களை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் முயற்சிதான் சட்ட உதவி. அதன்படி, சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் இயற்றும் முன்பே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா மற்றும் தண்டபாணி உள்ளிட்டோர் பேசினர்.

The post தேவையற்ற வழக்குகளை தவிர்க்க சட்டங்கள் வழங்கும் உரிமை குறித்து மக்களுக்கு சொல்ல வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice ,Sanjay Kishan Kaul ,Chennai ,
× RELATED விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி...