×

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடைய விளையாட்டு மேம்பாட்டு அணியினரும் டீம் ஸ்பிரிட்டுடன் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடைய, விளையாட்டு மேம்பாட்டு அணியினரும் டீம் ஸ்பிரிட்டுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: திமுகவின் புதிய துணை அமைப்பான விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் வணக்கம். இந்த அணிக்கு கேப்டனாக தயாநிதி மாறன் எம்.பி. இருக்கிறார். அவருடன் 10 துணைச் செயலாளர்கள் இருக்கிறீர்கள். மொத்தம் 11 பேர் இப்போது களமிறக்கிவிட்டாலும் ஒரு ‘மேட்ச்’ ஆடிவிடுவீர்கள். அணியின் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு முறையான நேர்காணலை நடத்தியிருக்கிறீர்கள்.

கடந்த ஜனவரி மாதம் கழகத்தின் 72 மாவட்டங்களைச் சேர்ந்த 1,735 பேர் நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார்கள். தயாநிதி மாறனுடன் இந்த அணியிலே இன்னும் இரண்டு எம்.பி.க்கள் இணைந்திருக்கிறார்கள். கவுதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோரும் இந்த அணியில் இருப்பதால் இது ஸ்டேட் அணியாக மட்டும் இல்லாமல், நேஷனல் அணியாக இருக்கிறது. அதாவது நம் ‘இந்தியா’ அணியாக இருக்கிறது.திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் என்று பல கல்லூரிகளிலும் கழகத்திற்கான மாணவர் அமைப்பு செயல்பட்டு வந்தது. பின்னர் அது மாணவர் அணியாகக் கட்டமைக்கப்பட்டது. எனவே இளைஞர்களை விளையாட்டுக் களம் பக்கம் திருப்ப வேண்டிய பணி கழகத்தினுடைய விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டின் சார்பில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தருவதற்கு இது உங்களுக்கு சரியான வாய்ப்பு. நீங்கள் நடத்துகின்ற விளையாட்டுப் போட்டிகள் திறமைமிக்க வீரர்களை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். அவர்கள் தேசிய அளவில், சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்து நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.விளையாட்டு என்றால் அதில் முக்கியமானது ‘டீம் ஸ்பிரிட்’. இது நமது டீம். நம்முடைய அணி. நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் டீம் வெற்றி பெறும் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் அணிச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 11. கிரிக்கெட் என்றாலும், புட்பால் என்றாலும், ஹாக்கி என்றாலும் ஒரு டீமிற்கு 11 பேர் தேவை.

அதுபோல் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், சட்டமன்றத் தேர்தல் என்றாலும், உள்ளாட்சித் தேர்தல் என்றாலும் கழகத்தின் வெற்றி என்பது முக்கியம். ஓர் அணியில் உள்ள அனைவரும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் தான் அணிக்கு வெற்றி கிடைக்கும். அந்த வகையில் அணியின் மாநில நிர்வாகிகள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் இணைந்து விளையாட்டுக் களத்தில் மட்டுமின்றி, தேர்தல் களத்திலும் பணியாற்ற வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது. எந்த ஒரு மேட்ச் நடந்தாலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது இயல்பு. தேர்தல் போட்டியிலும் இந்தியா முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடைய, விளையாட்டு மேம்பாட்டு அணியினரும் டீம் ஸ்பிரிட்டுடன் செயல்பட வேண்டும்.

The post நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடைய விளையாட்டு மேம்பாட்டு அணியினரும் டீம் ஸ்பிரிட்டுடன் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Team Spirit ,Forty Namade, ,Nation ,Namade ,Stalin ,Chennai ,Nadam Namade ,Nadam and ,Development Teams ,Team Spiret ,G.K. ,Dinakaran ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...