×

ஊட்டி எமரால்டு பகுதியில் மர்மமான முறையில் 2 புலிகள் உயிரிழப்பு

ஊட்டி: ஊட்டியை அடுத்த எமரால்டு பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. ஒரே மாதத்தில் 6 புலிகள் உயிரிழந்த சம்பவம் வனஉயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. இங்கு வனவிலங்குகளுடன் சண்டை, நோய் உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டத்திற்குபட்ட எமரால்டு அருகில் உள்ள, நேருநகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணைக்கு தண்ணீர் செல்லும் நீரோடையிலும், அதற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலும் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சென்று புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,“அவலாஞ்சி வனப்பகுதிக்குட்பட்ட எமரால்டு பகுதியில் இறந்துள்ள 2 புலிகளும் பெண் புலிகள். இவை இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். உடலில் சந்தேகப்படும்படி காயங்கள் எதுவும் இல்லை. நாளை, (இன்று) பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகள் கோவை மற்றும் ஐதராபாத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் புலிகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்’’ என்றனர். கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வன சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரமே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. மேலும், முதுமலை வனப்பகுதியில் மற்றொரு இடத்தில் ஒரு புலியும், நடுவட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலியும் இறந்துள்ளன. இப்படி ஒரே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் 6 புலிகள் இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஊட்டி எமரால்டு பகுதியில் மர்மமான முறையில் 2 புலிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Feeder ,Emerald region ,Emerald ,Dinakaran ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா...