×

5, 6வது அணு உலைகளுக்காக கூடங்குளத்திற்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது: கயிறு அறுந்ததால் மீட்புப் பணிகள் தாமதம்

நெல்லை: கூடங்குளத்தில் 5, 6 அணு உலைகளுக்காக நீராவி ஜெனரேட்டரை எடுத்து வந்த இழுவை கப்பல் தரை தட்டியதால் நிறுத்தப்பட்டது. கயிறு அறுந்ததால் மீட்புப் பணிகள் தாமதாகியுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலைகளும் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இவை தவிர 5, 6வது அணு உலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதன் மூலம் கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அணு உலைகளில் பயன்படுத்தும் உதிரி பாகங்கள், எரிகோல்கள் ஒப்பந்தப்படி ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அணு மின் நிலையம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான உதிரிபாகங்களை ‘ரோஸடாம்’ நிறுவனம் சப்ளை செய்கிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6வது அணு உலைகளில் பயன்படுத்துவதற்கான 2 நீராவி ஜெனரேட்டர்கள், ரஷ்யாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தது. தலா 300 டன் எடை கொண்ட இந்த ஜெனரேட்டர்களை பார்ஜில் ஏற்றி இழுவைக் கப்பல் மூலம் கூடங்குளத்தில் உள்ள மினி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கூடங்குளம் மினி துறைமுகத்திற்கு அருகில் வந்த போது இழுவை கப்பல் தரை தட்டி நின்றது.

தொடர்ந்து முயற்சி செய்த போது இழுவை கப்பல் மூலம் இழுத்து வரப்பட்ட கயிறு அறுந்து போனது. இதையடுத்து முத்துக்குளித்தல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக மாற்று கயிறு பார்ஜில் நேற்று பொருத்தப்பட்டது. ஆனால், நீரோட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் தரை தட்டி காணப்பட்டது. இதனால் மீட்புப்பணிகள் தாமதமானது. நேற்று மாலை வரை இழுக்க முடியவில்லை.

மீட்புப் பணிகள் இன்று மீண்டும் தொடரும். இன்று இழுவை கப்பல் மீட்கப்பட்டு ஜெனரேட்டரை கூடங்குளம் மினி துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இழுவை கப்பல் தரை தட்டி நிற்பதால் கூடங்குளத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய தொழில் பாதுாப்பு படையினர் மினி துறைமுகத்தில் இருந்தவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post 5, 6வது அணு உலைகளுக்காக கூடங்குளத்திற்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது: கயிறு அறுந்ததால் மீட்புப் பணிகள் தாமதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...