×

திமுக என்ற வலுவான அணி இருக்கும் வரை தமிழ்நாட்டை வெல்லலாம் என நினைப்பவர்கள் முயற்சி ஒருபோதும் வெல்லாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை புது கல்லூரியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் டெல்லிக்கு செல்வதால் விழாவில் அவரால்கலந்துகொள்ள முடியவில்லை. வெறும் 9 மாதங்களில் ஏராளமான போட்டிகளை நடத்தியுள்ளார்கள். நான் இளைஞரணியின் செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு அமைச்சர். தயாநிதி மாறன் எம்.பி. விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு செயலாளர்.

ஒரு இளைஞரை போல ஓடியாடி கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரைப் போலவே விளையாட்டு மேம்பாட்டு அணியும் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக தேர்வாகி வந்துள்ள அத்தனை நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகள்.கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஸ்டேடியம், விளையாட்டு நகரம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். அடுத்து கேலோ இந்தியா யூத் கேம்ஸ், ஹெச்சிஎல் சைக்கிளத்தான், பார்முலா-4 உள்ளிட்ட போட்டிகளை நடத்த உள்ளோம்.

கலைஞர் தொடர் ஜோதி ஓட்டம், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று முதல்வர் விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு வழங்கியுள்ளார். நீங்கள் அதை தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கிராம, ஒன்றிய, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அதை ஒரு போட்டியாக மட்டுமின்றி திமுக கொள்கைகளை எடுத்தும் சொல்லும் வகையில் நடத்தலாம். விளையாட்டு மேம்பாட்டு அணி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு திமுக அரசும், விளையாட்டு மேம்பாட்டு துறையும் என்றும் துணை நிற்கும். குறிப்பாக நான் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன்.

இன்றைக்கு தமிழ்நாட்டை வெல்லலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதற்கான முயற்சியும் செய்கிறார்கள். அவர்களின் முயற்சி இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும், தமிழ்நாட்டில் மட்டும் ஒருபோதும் வெல்லாது. இன்றைக்கு நமது தலைவர் அரசியல் களத்தில் வீசும் சுழற்பந்தில் நம் கொள்கை எதிரிகள் எல்லாம் கிளீன் போல்டு ஆகி வருகின்றனர். எனவே முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் மாநிலமாக்க அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக பணியாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

*மாணவர்கள்தான் திமுகவின் முதுகெலும்பு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் பேசியதாவது: கட்சிக்கு அப்பாற்பட்டு விளையாட்டு மீது எவ்வளவு இளைஞர்கள் ஈடுபாட்டுடன் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் திமுக தொடங்கிய போது மாணவர்கள் தான் திமுகவின் முதுகெலும்பாக இருந்தார்கள். அப்போது கல்லூரிகளில் திமுக என்பது மிகப் பெரிய சக்தியாக இருந்தது. இன்று விளையாட்டு மேம்பாட்டு அணி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை திமுக பக்கம் இழுப்பதற்கு மிகப் பெரிய சக்தியாக இந்த அணி இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த அணியை தலைவர் உருவாக்கினார். அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்று உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து புதிய கருத்து அல்ல. பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்து சொன்ன கருத்து தான். என்ன ெசால்கிறோம் என்றால், பிறப்பால் நான் தாழ்ந்தவன் அல்ல, பிறப்பால் நீ உயர்ந்தவன் அல்ல. ஆனால் நீ சொன்னால் அதை எதிர்ப்பேன். இது தவறா? இதை தான் சொன்னார். பிறப்பால் என்னை நீ பிரிக்காதே. நான் சமம். சமத்துவத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி தான் திமுக.

அண்ணா உருவாக்கிய போது என்ன சொல்லி உருவாக்கினார். இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள். இவரது கருத்து இந்துக்களுக்கு எதிரானது என்கிறார்கள். என்றைக்குமே இந்துக்களுக்கு எதிரான கருத்தை அவர் சொல்லியதே இல்லை. அவர் சொன்னது, என்னை பிரிக்காதே.. என்னை பிரித்து இழிவுபடுத்தாதே அது தவறா? உனக்கு என்ன மூளை இருக்கிறதோ அது தான் எனக்கும் இருக்கிறது. உனக்கு என்ன ரத்தம் ஓடுகிறதோ அதே ரத்தம் தான் எனக்கும் ஓடுகிறது. அப்போது நீ மட்டும் ஒசத்தி நான் தாழ்ந்தவன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றார்.

The post திமுக என்ற வலுவான அணி இருக்கும் வரை தமிழ்நாட்டை வெல்லலாம் என நினைப்பவர்கள் முயற்சி ஒருபோதும் வெல்லாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Udayanidhi Stalin ,Chennai ,Rayapetta New College ,Tamilnadu ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...