×

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைப்பந்து தூவும் பணி துவக்கம்: அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்க திட்டம்; முதன்முறையாக களமிறங்குகிறது இந்திய கடற்படை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சம் விதைப்பந்துகளை ஹெலிகாப்டர் மூலம் தூவும் பணியை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் டிங்க்ரா துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் இந்திய கடற்படை மற்றும் வனத்துறையுடன் இணைந்து, அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் முயற்சியாக நாட்டு இன மரங்களான புளி, நாவல், வேம்பு, புங்கன் போன்ற 4 லட்சம் விதைப்பந்துகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் தூவும் பணிகள் நடைபெற உள்ளது.  இதற்கான தொடக்க விழா நேற்று உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் நடைபெற்றது.

மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொருளாளர் சுவாமி ராமகிருஷ்ணநந்தா புரி, விதைப்பந்துகளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய இந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் டிங்க்ராவிடம் ஒப்படைத்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகளை தூவும் பணியை கடற்படை அதிகாரி ரவிக்குமார் டிங்க்ரா துவக்கி வைத்து பேசும்போது, ‘‘காடுகளை பசுமையாக்கும் பணியில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது சிறப்பான பணி. இந்திய கடற்படை முதல் முறையாக வானிலிருந்து விதைப்பந்துகளை தூவும் பணியில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட உள்ளது. ஐஎன்எஸ் பருந்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் இன்னும் இரு வாரங்கள் இப்பணியில் ஈடுபடும்.

காடுகளில் விதைப்பந்துகளை தூவி மரங்கள் வளர்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சமுதாயத்திற்கு பயனுள்ள இத்திட்டத்தில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தள கமாண்டிங் அதிகாரி கேப்டன் விக்ரந்த் சப்னிஸ், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகி மாத்ரூ கிருபார்ம சைதன்யா, அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சம் விதைப்பந்து தூவும் பணி துவக்கம்: அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்க திட்டம்; முதன்முறையாக களமிறங்குகிறது இந்திய கடற்படை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Indian Navy ,Ramanathapuram ,Tamil Nadu ,Puducherry Regional Navy ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...