×

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் கலெக்டர்கள் 30ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புக் குழாய்களை அமைத்து, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய வகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் குடிமக்கள் பாதிக்கப்படுவது வருந்தத்தக்கது; இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளைத் கலெக்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

குடிமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த மற்றும் நீர்க் கசியும் குழாய்களை அடையாளம் கண்டு சரிசெய்தல், உரிய துறையினருடன் ஒன்றிணைந்து சேதமடைந்த மற்றும் நீர்க் கசியும் குழாய்களை உடனடியாகக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோக உள்கட்டமைப்பு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கங்களிலும் தேக்கிவைக்கப்படும் நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் உறை அடுக்குகள் அமைக்கப்பட்டிருப்பதையும் பராமரிப்பு அறைகளில் மூடிகள் பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

நீரைச் சுத்தப்படுத்தப் போதுமான அளவு குளோரின் பொடி நீரில் கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிப்பதற்காக விநியோகிக்கப்படும் நீரில் கிருமிகள் எவையேனும் கலந்துவிடாத வகையில் நீரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பல்வேறு மூலங்களிலிருந்தும் தண்ணீர் மாதிரிகளை எடுத்து, அதை முறையான பரிசோதனைக்கு உட்படுத்தி நீரின் தரம் உரிய மட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய சோதனைகளை அதிக முறை நடத்தி தரமான கண்காணிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். களப்பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களை நீரின் தரத்தைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மாதிரிப் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு நீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளுடன் ஒருங்கிணைந்து அதிகப்படியான நீர் மாதிரிகளைச் சேகரித்து, நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.குடிநீரின் தரம் தொடர்பான பிரச்னைகளை உடனுக்குடன் களையும்வகையில் ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவ வேண்டும். குடிநீர் பிரச்னை தொடர்பாக புகாரளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை குடிமக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்ட விரிவான நடவடிக்கைகள் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். இவ்வாறு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் கலெக்டர்கள் 30ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,Chennai ,Tamil Nadu ,Sivdas Meena ,Dinakaran ,
× RELATED சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்;...