×

சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை படம் பிடித்த சந்திரயான்-2 விண்கலம்: இஸ்ரோ தகவல்

சென்னை: ‘‘சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்துள்ளது’’ என்று குறிப்பிட்ட இஸ்ரோ அந்த படத்தை வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆக. 23ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பிரக்யான் ரோவரும் நிலவில் இறங்கியது. லேண்டர் மற்றும் ரோவர் கலனில் உள்ள பிரத்யேக கருவிகள் 14 நாட்கள் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அத்தகவல்களை இஸ்ரோ மையத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும் நிலவில் சல்பர் மற்றும் ஆக்ஸிஜன் இருந்ததை உறுதி செய்தது. நிலவின் வெப்பநிலை, தரைபரப்பில் பிளாஸ்மா, நில அதிர்வு உள்ளிட்ட ஆய்வுகள் மூலம் சந்திரயான்-3 கண்டுபிடித்துள்ளது.

மேலும், லேண்டர் மற்றும் ரோவர் நடத்திய ஆய்வுகளின் தரவுகளும் இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 15 நாளை கடந்துள்ள நிலையில், ரோவரும், லேண்டரின் கருவிகள் ஓய்வு நிலைக்கு மாற்றப்பட்டது. மறுபடியும் சூரிய உதயத்தின்போது இக்கருவிகள் மீண்டும் செயல்பாட்டு வரும் என்று இஸ்ரோ காத்திருக்கிறது. முன்னதாக லேண்டர் கருவி சிறிது தூரம் பறந்து வெற்றிகரமாக 30 – 40 செ.மீ. தொலைவில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படமெடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் கருவி கடந்த 6ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை படம் பிடித்ததுள்ளது. நிலவின் மேற்பரப்பில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களால் ஏற்படும் அதிதீவிர சிதறல்களால் லேண்டர் நன்றாக தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை படம் பிடித்த சந்திரயான்-2 விண்கலம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...