×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு மாதத்தில் கடத்தல் ரேசன் அரிசி 16 டன் பறிமுதல்: வாகனங்களும் பறிமுதல்

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆக.8ம் தேதி முதல் செப்.8ம் தேதி வரை ஒரு மாதத்தில் கேரளாவுக்கு கடத்த இருந்த 16 டன் ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் கடைகளில் இலவசமாக 20 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மற்றும் குறைந்த விலையில் சீனி, பாமாயில், பருப்பு வழங்கப்படுகிறது. இதனை ஏழை, எளிய மக்கள் பெரிதும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரேசன் கடைகளில் முறைகேடுகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் பொருட்கள் விநியோகத்திற்கு பாய்ண்ட் ஆப் ஸ்கேல் முறை தற்போது புழக்கத்தில் உள்ளது.

இதன்படி பொதுமக்கள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தில் குடும்பத்தின் ஒருவரின் கைரேகை பதிவுக்கு பின்தான் பொருட்கள் வாங்க முடியும். வாங்கிய பொருட்களின் அளவு, விலை விபரங்கள் அவர்களின் செல்போனிற்கும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சில ரேசன் கடைகளில் முகவர்கள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் ரேசன் கடையின் அருகில் தான் இருப்பர். அவர்களின் முக்கிய நோக்கம் இலவச அரிசி, கோதுமையை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதுதான். சில கார்டுதாரர்கள் ரேசன் அரிசியை வாங்குவதில்லை. அவர்களை தேர்வு செய்து இலவச ரேசன் அரிசிக்கு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10க்கு விலை பேசி அவர்கள் மூலம் ரேசன் கடைகளில் இருந்து அரிசியை முறைப்படி வாங்க செய்வர்.

பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முகவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அரிசியை கொடுத்து பொதுமக்கள் பணத்தை பெற்று செல்கின்றனர். இப்படியாக பலரிடம் ரேசன் அரிசியை வாங்கி ஒரு இடத்தில் பதுக்கி வைத்து கேரளாவுக்கும், கோழி பண்ணைகளுக்கும் கடத்தப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் போது குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரின் வாகன சோதனையில் கையும் களவுமாக மாட்டிக்கொள்கின்றனர். தமிழ்நாடு ரேசன் அரிசி டன் கணக்கில் பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆக. 8ம் தேதி முதல் செப்.8ம் தேதிவரை சுமார் 16 டன் (16 ஆயிரம் கிலோ) கடத்தல் ரேசன் அரிசி பிடிபட்டுள்ளது. இதில் ஆக. 8ம் தேதி சேர்ந்தமரம் பகுதியில் 1040 கிலோ, ஆக.13ம் தேதி சிவசைலம் ஆழ்வார்குறிச்சி சாலையில் 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக. 18ம் தேதி மூன்றடைப்பு நெடுங்குளம் பஸ் நிறுத்தத்தில் 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆக 22ம் தேதி புளியரை வாகன சோதனை சாவடியில் 8 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆக.24ம் தேதி பாப்பாக்குடியில் இருந்து பாப்பாங்குளம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் ரேசன் அரிசி பிடிபட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று நெல்லையிருந்து நாகர்கோவில் செல்லும் நான்கு வழிச்சாலையில் 4 ஆயிரம் கிலோ கடத்தல் ரேசன் அரிசி பிடிபட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் செப். 8ம் தேதி வரை சுமார் 16 டன் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டதை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 12 பேருக்கு மேல் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இதனை தடுக்க ரேசன் கடைகளில் முகாமிட்டிருக்கும் முகவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும். ரேசன் கடைகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தவேண்டும். கடை பணியாளர்களை தவிர மற்றவர்கள் இருப்பதை கண்காணிக்க வேண்டும். தினசரி இருப்பு சரக்குகளை கடையின் வெளியில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் எழுதி வைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

The post நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு மாதத்தில் கடத்தல் ரேசன் அரிசி 16 டன் பறிமுதல்: வாகனங்களும் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Paddy ,South Kasi ,Nalla ,Keralah ,South ,Kassi ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...