×

ஒடுகத்தூர் அருகே பரபரப்பு; பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு: 1 மணி நேரம் பஸ் நிறுத்தம்

ஒடுகத்தூர்: ஓடும் பஸ்சில்தான் ஏறுவோம் எனக்கூறி அரசு பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு செய்த சம்பவம் ஒடுகத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, ஆம்பூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அவ்வழியாக வரும் அரசு பஸ்களில் தினமும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் சில மாணவர்கள், பஸ்சில் இடம் இருந்தாலும் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது, பஸ் நிற்கும்போது ஏறாமல், பஸ் ஓடும்போது ஏறி சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் மனவேதனைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை 3 மணி அளவில் கல்லூரி முடிந்து மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் ஏறினர். ஆனால் சில மாணவர்கள் பஸ் புறப்படும் வரை காத்திருந்து ஓடும்போது ஏறினர். மேலும் பஸ்சினுள் இடம் இருந்தும் படியில் நின்றபடி பயணம் செய்தனர்.

இதனை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை நிறுத்திவிட்டு அனைவரும் உள்ளே வருமாறு கூறினர். அதற்கு மாணவர்கள் மறுத்தனர். மேலும் ‘நாங்கள் நிக்குற பஸ்சில் ஏறமாட்டோம், ஓடும் பஸ்சில்தான் ஏறுவோம்’ என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதனால் பஸ்சை இயக்காமல் நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ெதாடர்ந்து கல்லூரி சார்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் பஸ்சில் ஏறினர்.

பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் பஸ் படியில் ஆபத்தான முறையில் தொங்கிகொண்டு சாகசம் காட்டுவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, பஸ் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒடுகத்தூர் அருகே பரபரப்பு; பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு: 1 மணி நேரம் பஸ் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Odugattur ,
× RELATED (வேலூர்) கிராம நிர்வாக உதவியாளருக்கு...