×

நடிகை விஜயலட்சுமி புகார் எதிரொலி; இயக்குநர் சீமானுக்கு போலீஸ் சம்மன்: 12ம் தேதி நேரில் ஆஜராவதாக பதில்


சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் எதிரொலியாக, வளசரவாக்கம் மகளிர் போலீசார், இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கு 12ம் தேதி நேரில் ஆஜராவதாக சீமான் பதில் அளித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருவரும் திருமணம் செய்வதாகக் கூறி ஒன்றாக வசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளை திருமணம் செய்து கொண்டார். இதனால் கடந்த 11 ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்வதாகக் கூறி சீமான் ஏமாற்றி விட்டதாக போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்து வந்தார்.

கடைசியாக அதிமுக ஆட்சிக் காலத்தில் நடிகை விஜயலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்தப் புகார் மீது வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீமான் மீது மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். இந்தப் புகார் மீது போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் தலைமையில் வளசரவாக்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையைத் தொடர்ந்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே இயக்குநர் சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இயக்குநர் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை ஏற்றுக் கொண்ட சீமான், வருகிற 12ம் தேதி செவ்வாய்கிழமை ஆஜராவதாக பதில் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் விஜயலட்சுமியுடன் பழகியதோடு அவரது கருக்கலைப்புக்கு அவர் காரணம் என்று தெரியவந்தாலோ, திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தாலோ அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

The post நடிகை விஜயலட்சுமி புகார் எதிரொலி; இயக்குநர் சீமானுக்கு போலீஸ் சம்மன்: 12ம் தேதி நேரில் ஆஜராவதாக பதில் appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Seeman ,Chennai ,Valasaravakkam ,Naam Tamilar Party ,
× RELATED ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்வகுடி...