×

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 15 சிறுமிகள்,பள்ளி மாணவிகள் மாயம்

*பெற்றோர் கண்காணிக்க வலியுறுத்தல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 15 சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகள் மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் அரசு, கல்லூரி பஸ்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட சிறுமிகள், பள்ளி மாணவிகள் மாயமாகியுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அதேபோல், நேற்று முன்தினம் திருப்பத்தூர் அருகே 17 வயது பிளஸ் 2 மாணவி, ஜோலார்பேட்டையில் பிளஸ் 2 மாணவி மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாயமான மாணவிகளை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சமூக வலைதளங்கள் உள்ளிட்டவைகளில் மாணவிகள் மூழ்கியுள்ளனர். இதனால் காதல் வசப்பட்டு மாயமாகி விடுகின்றனர். அறியாத வயதில் புரியாத நினைவாக சென்றுவிடுகின்றனர். திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் மற்றும் சமூக வலைதளங்களால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகள், வீடுகளில் இருந்து மாயமான மாணவிகள், கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் மாவட்டத்தில் நடைபெறவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கூட தனியார் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் மீட்கப்பட்டனர். இதேபோல் பல மாணவிகள் கடத்தப்பட்ட வழக்கு, போக்சோ வழக்கிலும் உரிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களின் நடைமுறையை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளுக்கு சென்று வாரம்தோறும் குழந்தைகளை பற்றி விசாரிக்க வேண்டும். செல்போன் வழங்கும்போது அதில் தேவையில்லாத ஆப்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 15 சிறுமிகள்,பள்ளி மாணவிகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,Tirupathur ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...