
*கால்நடைகள் பாதிப்பு, நிலங்கள் மாசடைகிறது, நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூர் : மக்காத குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கருர் மாநகராட்சியின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் இரண்டு வகைகளான குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கருரைச் சுற்றிலும் உள்ள முக்கிய போக்குவரத்து சாலைகளின் ஓரம் மக்காத தன்மை கொண்ட குப்பைகளை இரவு நேரங்களில் கொட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.கரூர் மாநகரச் சுற்றிலும் கருர் திருச்சி பைபாஸ் சாலை, சேலம் மதுரை பைபாஸ் சாலை, கோவை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகிறது.
இந்த பிரதான சாலைகளை ஒட்டி, விவசாய நிலங்கள் மற்றும் விளைநிலங்கள் அதிகளவு உள்ளன. இந்த நிலங்களில் இரவு நேரங்களில் மக்காத தன்மை கொண்ட குப்பைகள் லாரிகளில் கொண்டு வந்து இரரோடு இரவாக கொட்டி விட்டு செல்லும் நிகழ்வுகள் கரூரில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.மக்காத தன்மை கொண்ட இந்த குப்பைகளை, மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடு போன்றவை பயன்படுத்துவதால் கால்நடைகளும் அதிகளவு பாதிப்பை சந்திக்கின்றன. இதே போல், நிலங்களும் இதன் காரணமாக மாசடைகிறது.
பல்வேறு பாதிப்புகளை இந்த வகை குப்பைகள் அதிகளவு ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த நிகழ்வுகள் பிரதான பைபாஸ் சாலையோரம் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது.
கால்நடைகள் பாதிப்பு, நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கிய காரணிகளாக இந்த வகை குப்பைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பைபாஸ் சாலையோரம் இந்த வகை குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த நிகழ்வுகள் நடைபெறாத வகையில் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post கரூர் மாநகராட்சி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் மக்காத குப்பைகள் appeared first on Dinakaran.