×

42 ஆண்டுகால கனவு நனவாகிறது குமுளியில் ரூ.7.50 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட்

*நாளை மறுநாள் பூமிபூஜை நடக்கிறது

*தேனி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி

கூடலூர் : மக்கள் நலனில் அக்கறை காட்டும் நல்லரசாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தேனி மாவட்ட மக்களின் 42 ஆண்டுகால கனவை நனவாக்கி உள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளியில் பஸ்டாண்டு அமைக்க அமைச்சர்கள் முன்னிலையில் வரும் 11ம் தேதி பூமிபூஜை நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தின் தெற்குப்பகுதியான குமுளி, ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியாகவும், தமிழக கேரள மாநிலங்களின் எல்லையாகவும் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பெங்களூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலிருந்தும் குமுளிக்கு நாள்தோறும் வரும் நூற்றுக் கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேனி-கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிமீ தூரம் பாதுகாக்கப்பட்ட, கூடலூர் மற்றும் கம்பம் மேற்குவனப்பகுதியில் மலைச்சாலை வழியாக குமுளியை சென்றடைகிறது.

கடந்த 1981ல் கட்டிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் குமுளி கிளை பணிமனை இங்கு செயல்பட்டு வந்தது. ஆனால், குமுளி தமிழக எல்லை பாதுகாக்கப்பட்ட தமிழக வனப்பகுதிக்குள் இருப்பதால், அங்கு பஸ்டாண்டு அமைக்கவோ, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதி செய்யவோ வனத்துறை அனுமதிக்க வில்லை. இங்கு பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாததால், குமுளிக்கு வரும் பயணிகள் பஸ்கள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டு வந்தனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் உள்ளிட்ட நேரங்களில் இந்த மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனால் இங்குள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பஸ்ஸ்டாண்ட்ஆக மாற்றி, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மக்கள் 2011ல் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, குமுளியிலுள்ள தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை பஸ்டாண்டாக மாற்றவும், அங்குள்ள பணிமனையை லோயர்கேம்ப்க்கு மாற்றி அமைக்கவும் அரசு முடிவு செய்தது. புதிய பணிமனை அமைக்க லோயர்கேம்பில் மின்வாரியத்துக்கு சொந்தமான 3.87 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

லோயர்கேம்பில் புதிய பணிமனை கட்டிடம் கட்ட அனறைய ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் நிதியில் ரூபாய் ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்போது அமைச்சராக இருந்த ஓபிஎஸ்க்கும், எம்எல்ஏவுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லாததால் ஓபிஎஸ்சை மீறி பணிகள் செய்ய அதிகாரிகள் தயங்கினர். பல்வேறு காரணங்களைச் சொல்லி பணியை கிடப்பில் போட்டனர். நீண்ட இழுபறிக்குப்பின் 2015ல் லோயரில் புதிய பணிமனை கட்டுமானப்பணிகள் முடித்து, குமுளியிலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை லோயர்கேம்புக்கு மாற்றினர். இந்த பணிமனையில் இருந்து 18 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இங்கு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக், அலுவலக ஊழியர்கள் என சுமார் 120 பேர் பணியிலுள்ளனர்.

லோயர்கேம்புக்கு பணிமனையை மாற்றியதை தொடர்ந்து, குமுளியில் இருந்த பணிமனையை பஸ்டாண்ட் ஆக மாற்றி, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கூடலூர் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் லோயர்கேம்பில் புதிய பணிமனையில் இயங்க ஆரம்பித்த போக்குவரத்து துறை, பழைய பணிமனையை ஒப்படைக்க மறுத்தது. பணிமனை உள்ள இடத்திற்கும், அங்குள்ள கட்டிடத்திற்குமான தொகையை கணக்கிட்டு கேட்டது. இதனால் கூடலூர் நகராட்சி நிர்வாகமும் பஸ்டாண்டு கட்டும் எண்ணத்தை கைவிட்டது. இரு துறைகளின் மோதலால் வனத்துறையும் இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றது. அதோடு குமுளியில் பஸ் ஸ்டாண்ட் என்பது பொதுமக்களுக்கு கனவானது. இதனால் குமுளிக்கு வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கும் அவலமும் தொடர்ந்தது.

இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், குமுளி தமிழக எல்லையில் பஸ் ஸ்டாண்டு அமைப்பது குறித்து, இப்பகுதி மக்கள் கம்பம் தொகுதி எம்எல்ஏவும், திமுக தேனி தெற்கு மாவட்ட செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கையை கொண்டு சென்றனர். இது தெர்டர்பாக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் துறை சார்ந்த அமைச்சரிடமும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இப்பிரச்னையை கொண்டு சென்றார்.

இதையடுத்து மக்கள் நலனின் அக்கறை கொள்ளும் திமுக அரசின் முதல்வரான ஸ்டாலின், கடந்த சில மாதங்களுக்கு முன் கூடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கேரள மாநில எல்லைப்பகுதி குமுளியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதைடுத்து எல்லை குமுளி தமிழகப்பகுதியில் பஸ்டாண்டு அமைக்கும் பணிக்கான முதல்கட்ட ஆய்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆய்வு முடிவடைந்த நிலையில், இங்கு பஸ்டாண்டு அமைக்க அமைச்சர்கள் முன்னிலையில் வரும் 11ம் தேதி பூமிபூஜை நடைபெறுகிறது. இதனால் தேனி மாவட்ட மக்களின் 42 ஆண்டுகால கனவு திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நனவாகிறது.

தொழிலாளர்களுக்கு ஏசி அறை

கம்பத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பணிமனையுடன் கூடிய இரண்டு கிளைகள் உள்ளது. இதில் சுமார் 110 வண்டிகளும், சுமார் 500 தொழிலாளர்களும் உள்ளனர். இதில் இரவுநேர பணி முடிந்து, அதிகாலை பணிக்குச் செல்லும் ஓட்டுநர், நடத்துனர்கள் அலுவலகத்தில் உள்ள ஓய்வறையில் தங்குகின்றனர். கம்பம் கிளை1, மற்றும் கிளை 2ல் உள்ள இந்த ஓய்வறைகள் ஓட்டுநர், நடத்துனர் நிம்மதியான உறக்கத்திற்காக ஏசி அறையாக மாற்றப்பட்டுள்ளது. இதையும் அமைச்சர் திறந்து வைக்கிறார்.

The post 42 ஆண்டுகால கனவு நனவாகிறது குமுளியில் ரூ.7.50 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.

Tags : Kumuli ,Bhumi Puja ,Theni district ,Gudalur ,
× RELATED பெரியாறு புலிகள்...