×

காங்கயம் வட்டாரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 524 பேர் பயன்

*தமிழக அரசுக்கு பாராட்டு

காங்கயம் : நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்பிலான சொத்துக்கு சமம். இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவு பழக்க வழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும்.
துரித உணவு கலாசாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம். ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பெரிய சாதனை இல்லை. அந்தத் திட்டம் கண்முன்னே நல்ல பலனை அளிக்க வேண்டும். அது சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்படியொரு திட்டம்தான், தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம்.

தமிழ்நாடு முதலமைச்சர் தொற்றா நோய்களின் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், மக்களை தேடி மருத்துவம் என்னும் புதிய திட்டத்தினை தொடங்கி வைத்தார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்க பெற்ற நிலையினை மாற்றி, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இவற்றை வழங்குவதன் மூலமாக தொற்றா நோய்களின் தாக்கத்தை எதிர்கொள்ள இத்திட்டமானது வழிவகுக்கிறது.

இத்திட்டமானது வட்டாரங்களில் உள்ள சுகாதார மையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் படிப்படியாக அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் விரிவுப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று உயர் ரத்த அழுத்தம்,

நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளை 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் மற்றும் நடக்க இயலாதவர்களுக்கும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலமாக வழங்குதல், இல்லத்தில் வழங்கக்கூடிய நோய் ஆதரவு சிகிச்சை சேவைகளை செவிலியர் மூலம் வழங்குதல், இயன்முறை மருத்துவர்களால் வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சிகிச்சை, சிறுநீரக நோயாளிகளை பராமரிக்க சுய டயாலிசிஸ் செய்வதற்கான பைகளை வழங்கி, நோய் ஆதரவு சிகிச்சைகள் செவிலியர்கள் மூலமாக பராமரித்தல், குடும்பத்தில் பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளையும் மற்றும் வேறு ஏதேனும் உடல்நலத் தேவைகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்பது போன்ற பிற பரிந்துரை சேவைகள் வழங்கப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவத்திட்டம் ஓர் சிறந்த பாலமாக அமைந்துள்ளது. மருத்துவமனைகளின் தரத்திக்கேற்ப தொற்றா நோய்களுக்கான மருத்துவ சேவையை வழங்க ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு செவிலியர், அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காங்கயம் வட்டாரத்தில் 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு மருத்துவமனை, சுகாதாரநிலையங்களுக்கு சென்று மருத்துவம் பெற்று வருகின்றனர்.

காங்கயம் வட்டாரத்தில் பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 238 பயனாளிகளும், மனவளர்ச்சி குறைபாடுள்ளவர்கள் 56 பயனாளிகளும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு புண் வந்தவர்கள் 23 நீரிழிவு பயனாளிகளும், வயது முதிர்ந்தவர்கள் படுக்கையாக உள்ளவர்கள் 180 பயனாளிகளும், மனநிலை மாதிக்கப்பட்டவர்கள் 7 பயனாளிகளும், டயாலிசிஸ் சேவைகளில் 7 பயனாளிகளும், கேன்சர் பாதிக்கப்பட்டவர்கள் 11 பயனாளிகளும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ள 5 பயனாளிகளும் என இத்திட்டன் மூலம் மொத்தம் 524 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தில் தொடர் மருந்து விநியோகம் மற்றும் சேவைகளாக மாதாந்திர மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்த `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானத்தை பெறும் மக்களின் மருத்துவ செலவுகள் என்பது பாதியாகக் குறைந்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு நடத்தியுள்ள சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

அனைத்து சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் திராவிட மாடல் அரசு என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினால் இந்த மாடல் அரசுக்கு பொதுமக்களிடையே ஆதரவும், பாராட்டும் பெற்றுள்ளது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நோயின்றி வாழ உடல் ஆரோக்கியமும் உளமகிழ்வும் வேண்டும்.

The post காங்கயம் வட்டாரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 524 பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Kangayam district ,Tamil Government Kangyam ,
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...