×

களிமண் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் வைக்க கூடாது

*வேலூர் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

வேலூர் : களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை 10 அடிக்கு மேல் வைக்கக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார். வேலுர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்பி மணிவண்ணன், டிஆர்ஓ மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், ஏஎஸ்பி பாஸ்கரன், ஆர்டிஓக்கள் கவிதா, வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது: விநாயகர் சிலை நிறுவும் இடங்களில் ஆர்டிஓவிடம் அதற்கென வழங்கிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சிலை அமைக்கப்படும் இடம் தனியாருக்கு சொந்தமான இடமானால் நில உரிமையாளரிடம் இசைவு கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபனை இன்மை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒலிபெருக்கிகள் பயன்படுத்தினால் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

சிலை வைப்பதற்காக அமைக்கப்படும் தற்காலிக கொட்டகைகள் தீ விபத்து ஏற்படாத வண்ணம் உள்ளதா? என்று தீயணைப்பு துறையின் சான்று பெற வேண்டும். நிகழ்விற்கான மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான மின்வாரிய அலுவலரின் சான்றும் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து வழங்க வேண்டும். விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும் பொழுது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண் சிலைகளை பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது வேதியியல் பொருட்கள் கலந்த வர்ணம் பூசக்கூடாது.

சிலைகள் அதன் அடிபாகம் உட்பட தரையில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சியினர் பேனர்களோ மதத் தலைவர்களின் பேனார்களோ வைக்க கூடாது. சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்லும் பொழுது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். ஊர்வலமாக கொண்டு செல்லும் பொழுது காவல்துறை அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். வருவாய் துறை, காவல் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை மூலம் விதிக்கப்படும் நிபந்தனைகளை விழா குழுவினர் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

அலுவலர்கள் அனுமதிக்காக பெறப்படும் மனுக்களின் மீது விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு ஒற்றை சாளர முறையை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே சிலை வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஊர்வலம் நடைபெறும் பாதைகள் சிலை கிடைக்கும் இடங்களை முன்னதாகவே பிற துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டுத் தணிக்கை மேற்கொண்டு, சாலை வசதி, ஒளி வசதி, தடுப்புகள், தண்ணீர் இல்லாத கரைப்பிடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிலை கரைக்கப்படும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் வழிகளில் உள்ள தாழ்வான மின் கேபிள்களை மின்சார துறையினர் சிலைகளின் மீது படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும் நடத்திட விழா குழுவினரும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிலைகளை கரைக்கும் இடங்களில் நீர்மின்விளக்கு வசதி மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து தரும் பணிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதையடுத்து போலீசாருக்கு தனியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

3 சக்கர வாகனம், மாட்டுவண்டி பயன்படுத்த தடை

சிலைகளை நிறுவப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைப்பதற்கு விழா குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பித்து, மாலை 5 மணிக்குள்ளாக சிலைகளை கரைக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். சிலைகளைக் கொண்டு செல்லும் பொழுது நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மூன்று சக்கர வாகனங்களையோ, மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகளையோ பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின் போதும் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் எவ்வித வெடிபொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலைகளை கரைப்பதற்கு முன் பூ, அலங்காரங்கள், பிளாஸ்டிக் போன்ற அலங்கார பொருட்களை அகற்றிவிட்டு கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு 48 மணி நேரத்திற்குள்ளாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவ்விடங்களில் சேகரமாகியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். சிலை கரைக்கும் இடங்களில் தேவையான மின்விளக்கு வசதி தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற பணிகளை காவல்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post களிமண் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் வைக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : Vellore Consulting ,Vellore ,Dinakaran ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...