
*அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்
ஊட்டி : 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பிலான கடன் திட்ட உதவிகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், தாட்கோ, ஆவின், வாழ்ந்துக்காட்டுவோம் திட்டம்,தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி எம்பி., ராசா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில், மாவட்ட தொழில் மையம் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 75.24 லட்சத்திலும், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 17 பயனாளிகளுக்கு ரூ.76.62 லட்சம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.5.04 கோடி, தாட்கோ மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.25.35 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
மேலும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24.85 லட்சம் மதிப்பிலும், விவசாய கடன் 7 பயனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் மதிப்பிலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்க 8 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலும்,6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40.50 லட்சம் மதிப்பிலும் கடன் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கதர் கிராம வாரியம் சார்பில் 4 சுய உதவிக்குழுக்களுக்கு மண் அரைக்கும் இயந்திரம் ரூ.2.80 லட்சம் மதிப்பிலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடலூர் கிளை வாயிலாக ஜே67 கூடலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கறவை மாடுகள் என மொத்தம் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு வங்கி கடன் உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் வர வேண்டும் என நோக்கத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். சுய தொழில் துவங்க ஊக்குவிக்கும் பொருட்டும், இந்த ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு கடன் திட்ட இலக்கு ரூ.510 கோடியை எய்திடவும் மாவட்டங்கள் தோறும் கடன் வசதி விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நீலகிரியில் இன்று மாவட்ட தொழில் மையம் மூலமாக அனைத்து பிரிவினரும் பல்வேறு சுயமாக தொழில்கள் துவங்க கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டங்களின் மூலம் வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி பெறப்பட்டு தொழில் துவங்க ஆவண செய்யப்படுகிறது.
மேலும், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (யு.ஒய்.இ.ஜி.பி) கீழ் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை) கூடிய கடன்கள் வங்கி மூலம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி) திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் வரையில் தொழில் துவங்க 15 முதல் 35% வரை மானியத்துடன், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுயமாக தொழில் துவங்க திட்ட மதிப்பீட்டில் 35% மானியத்துடன் கூடிய கடன் உதவிகளும், மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடியும், கடனை திரும்ப செலுத்தும் காலம் வரையில் 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மானியம் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.75 லட்சமும், பாரத் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலான திட்ட மதிப்பீட்டில் தொழில் துவங்க மானியம் 25 சதவீதம் வழங்கப்படுகிறது.எனவே அனைவரும் இது போன்ற முகாம்களில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை தெரிந்து, தொழில் துவங்கி தங்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்தி கொள்ள முன்வர வேண்டும், என்றார்.
தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ.ராசா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்,புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஏழை, எளிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
இவை மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.
முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷபிலாமேரி,ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா,தாட்கோ பொது மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி, உதவி இயக்குநர் (கோவை) கதர் கிராம தொழில்கள் கிரி அய்யப்பன், உதவி இயக்குநர் (தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) ரமேஷ்கிருஷ்ணன், ஊட்டி நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி கடன் திட்ட உதவிகள் appeared first on Dinakaran.