×

தோகைமலை பகுதிகளில் கனமழையால் 16 ஆண்டுகளுக்கு பிறகு வடசேரி பெரியஏரி நிரம்பியது-மலர்தூவி வரவேற்ற விவசாயிகள்

தோகைமலை : தோகைமலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் வடசேரி பெரிய ஏரி 16 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது. மேலும் ஏரியின் வடிகால் வழியாக வெளியேறிய மழைநீரை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வாரிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் தடுப்பணைகள் நிறைந்து பாசன குளங்களுக்கு மழை நீர் செல்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் போதிய மழை இல்லாமல் பாசன குளங்களுக்கு மழை நீர் வராமல் வற்றிய நிலையில் இருந்து வந்தது.மேலும் பாசன குளங்களின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் ஆற்று வாரிகளில் மழைநீர் சேமிப்பு தடுப்பணைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவ்வப்போது பெய்யும் மழைநீரானது தடுப்பணைகளிலேயே தேங்கி விடுகிறது. இதனால் பாசன குளங்கள் அனைத்தும் வறண்டு போனதால் 15 ஆண்டுகளுக்கு மேல் பாசன குளங்கள் மூலம் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.தற்போது கடந்த சில நாட்களாக தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வருவதால் ஆற்றுவாரிகளில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் நிறைந்து பாசன குளங்களுக்கு மழைநீரானது வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாசன குளங்கள் நிறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தோகைமலை பகுதிகளில் பலத்தமழை பெய்ததால் வடசேரி பெரிய ஏரி நிறைந்து ஏரியின் உபரி நீரானது வடிகால் வழியாக செல்கிறது. 344.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடசேரி பெரிய ஏரியானது கடந்த 2005ம் ஆண்டு பெய்த கனமழைக்கு ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி உள்ளது. அதன் பின்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு வடசேரி ஏரியின் முழு கொள்ளளவை அடைந்து உபரிநீரானது வெளியேறியது. இதனை அடுத்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தோகைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் உபரிநீரை மலர் தூவி வரவேற்றனர். மேலும் வடசேரி பெரிய ஏரியின் கரை பகுதிகள், பாசனத்திற்காக திறக்கப்படும் மதகு பகுதியை எம்எல்ஏ ஆய்வு செய்து பழுதான பகுதிகளை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதேபோல் காவல்காரன்பட்டி அருகே திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் மழைநீரில் மூழ்கிய நெல் பயிர்களின் வயல்களை ஆய்வு செய்த எம்எல்ஏ, பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை அகற்ற உத்தரவிட்டார். 16 ஆண்டுகளுக்கு பிறகு வடசேரி பெரியஏரி நிரம்பியதால் சுமார் 1,000 ஏக்கர் குளத்துப்பாசனம் செய்யும் விவசாயிகளும், குடிநீர் ஆதாயம் பெறும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆய்வின்போது ஒன்றிய கவுன்சிலர்கள் லதா வேலுச்சாமி, சின்னையன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பொதுமக்கள் உடனிருந்தனர்….

The post தோகைமலை பகுதிகளில் கனமழையால் 16 ஆண்டுகளுக்கு பிறகு வடசேரி பெரியஏரி நிரம்பியது-மலர்தூவி வரவேற்ற விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Doghaimalayan ,Vadseri Periayeri ,Doghaimalai ,Vadseri ,Thokimalayan ,Periayeri ,
× RELATED கடவூர் மற்றும் தோகைமலையில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடி துவக்கம்