×

நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மொராக்கோவில் 300 பேர் பரிதாப பலி


* ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு; மக்கள் பெரும் பீதி
* ஸ்பெயின், போர்ச்சுகல், அல்ஜீரியாவிலும் உணரப்பட்டது

ரபாத்: மொராக்கோ நாட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அண்டை நாடுகளான ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களால், 33,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயடைந்தனர். இருநாடுகளின் பொருளாதார கட்டமைப்பே நிர்மூலமானது. தற்போது இரு நாடுகளும் மெதுவாக மீண்டு வரும் நிலையில், வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்றிரவு 11.14 மணியளவில்( இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.41 மணி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கும் இந்நாட்டின் எல்லைகளில் கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மவுரித்தேனியா ஆகிய நாடுகள் உள்ளன. மொரோக்கோவின் மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்டு 7.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூக்கத்தில் இருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த நிலநடுக்கமானது சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த கடும் நிலநடுக்கத்தை தொடர்ந்து மொராக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மொராக்கோவின் பேரிடர் மீட்புக் குழு வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைநகர் ராபத்தில் இருந்து மாரகேச் வரையில் நேற்றிரவு 11.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கிய நகரங்களின் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளை போல் சரிந்தன. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்த நிலையில் தெருக்களிலும் சந்துகளிலும் குவிந்தனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியத் தளமும், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மராகேச்சில் அமைந்துள்ள கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன.

சுற்றுலாப் பயணிகளும், மற்றவர்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மொராக்கோவின் தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது, மராகேக்கிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தெற்கே உள்ள அட்லஸ் மலைகளில் அதிகமாக இருந்தது. வட ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான டூப்கல் மற்றும் மொராக்கோ ஸ்கை ரிசார்ட்டான ஒகைமெடனுக்கு அருகில் இருந்தது. இந்த நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பிலிருந்து 18 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது அண்டை நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், அல்ஜீரியா வரை உணரப்பட்டது’ என்று கூறின. தொடர்ந்து இன்று காலை மொராக்கோ நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இன்று காலை நிலவரப்படி 296 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. படுகாயமடைந்த 153 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உதவ தயார்
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. சோகமான இந்த நேரத்தில் மொராக்கோ மக்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. தங்களது அன்புக்குரிய சொந்தங்களை இழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மிகவும் கடினமான இந்த நேரத்தில் மொராக்கோவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மொராக்கோவில் 300 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Morocco ,Spain ,Portugal ,Algeria Rabat ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...