×

திருச்சி மண்டலத்தில் 213 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் 140 பேர் கைது: 138 வழக்குகள் பதிவு

*குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை அதிரடி

திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த மாதம் முதல் நடப்பு மாதம் வரை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை சார்பில் 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளதாவது:

குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறையின் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிமைப் பொருள் கடத்தல் குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த ஆக.13ம் தேதி அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா சின்னவளையம் மேம்பாலம் அருகே லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1,300 கிலோ ரேசன் அரிசி, கடந்த ஆக.16ம் தேதி திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் பதுக்கிய 1,800 கிலோ ரேஷன் அரிசி, ஆக.22ம் தேதி திருச்சி லால்குடி பகுதியில் 1,050 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்கு பதியப்பட்டது.

ஆக.26ம் தேதி திருச்சி மணப்பாறை ஆனம்பட்டி பகுதியில் ஒரு தனியார் குடோனில் பதுக்கிய ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியும், ஆக.30ம் தேதி புதுக்கோட்டை கறம்பக்குடி 16 வேட்டன்விடுதி சாலையில் புதுப்பட்டி கடைவீதி அருகே நான்கு சக்கர வாகனத்தில் கடத்திய 1,650 கிலோ ரேசன் அரிசியும், செப்.4ம் தேதி திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கிய 4 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மண்டலத்தில் கடந்த மாதத்தில் 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுவரை கடத்தலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குடிமைபொருள்கள் கடத்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண். (டோல்பிரீ) 5950 தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தபட்டுள்ளது.

இதன் மூலம் வரும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கண்ட்ரோல் அறை தலைமையகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதனால் கடத்தல் தொடர்பான கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை வாரந்தோறும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மேற்படி கட்டணமில்லா தொலை பேசி மூலம் புகார்கள் கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி மண்டலத்தில் 213 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் 140 பேர் கைது: 138 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Trichy zone ,Department of Citizens' Supply and Investigation Action ,Trichi ,Trichy Central Zone ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் விபத்துக்கள்...