×

தமிழ்நாட்டில் முதன்முறையாக அமைகிறது சென்னையில் சிறப்பம்சங்களுடன் செல்லப்பிராணிகளுக்காக பூங்கா: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை, செப்.9: சென்னையில் உள்ள பலர் நாய்கள், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் தற்போதைய காலங்களில் மகனாக, மகளாக, நண்பனாக வளர்க்கப்படுகிறது. செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது மன அழுத்தத்திலிருந்து பெரும் விடுதலை அளிக்கிறது. ஆனால் அவைகள் வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்படுகிறது. எங்கும் வெளியே அழைத்து செல்லப்படாமல், மற்ற நாய்களுடன் பழகவும் விடாமல் வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்படுவதால் சோம்பேறியாக வளர்கிறது.

சிலர் செல்லப்பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மிக ஜாக்கிரதையாக, மிகவும் பயந்து பயந்து அழைத்து செல்கின்றனர். சென்னை சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இதனால் செல்ல பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்து வரும் உரிமையாளர்களுக்கு சவாலாக இருக்கும். வாகன ஓட்டிகளும் பயந்து வண்டியை மெதுவாக இயக்க அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதற்கும் நேரத்தை செலவிடுவதற்கும் செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு பூங்கா அமைப்பது தமிழ்நாட்டிலேயே இதுவே முதன்முறையாகும்.

இதுகுறித்து, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு கூறியதாவது: செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக பூங்கா மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட அபிராமபுரம் டிமான்டி பூங்காவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்தான கோரிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தில் இப்பூங்கா அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படும். பூங்கா வளாகத்தில், செல்லப் பிராணிகளுக்கான மருத்துவ வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறும். செல்லப்பிராணிகளுகளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக செல்லப்பிராணிகளுக்கான ஒரு பூங்கா உருவாக்கப்படும். இந்த பூங்கா 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும். பூங்காவில் செல்லப்பிராணிகளுக்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த பூங்கா வாயிலாக, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயனடையவர். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து செல்லப்பிராணிகளின் பிரியர்கள் கூறுகையில், ‘‘சென்னையில் அனைவரும் வேலை வேலை என பிஸியாக இருப்பதால் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட அனைவராலும் முடியாது. பெரும்பாலும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீட்டிலேயே வளர்கிறது. ஆகையால் அவற்றின் பழக்கத்தை மறைக்க செய்கிறது. செல்லப்பிராணிகளுக்கென பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டால் செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்றார்.

The post தமிழ்நாட்டில் முதன்முறையாக அமைகிறது சென்னையில் சிறப்பம்சங்களுடன் செல்லப்பிராணிகளுக்காக பூங்கா: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...