×

கழுகுமலை பேரூராட்சியில் பழுதாகி காட்சிப்பொருளான சிசிடிவி கேமராக்கள் சீரமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

கழுகுமலை, செப். 9: கழுகுமலை பேரூராட்சியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி காட்சிப்பொருளாகி உள்ளன. இவற்றை சீரமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கழுகுமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். கழுகுமலையில் பிரதான தொழிலாக தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. மேலும் விவசாய கூலித் தொழிலாளர்களும் உள்ளனர். சிலர், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலை செய்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் துறை சார்பில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சங்கரன்கோவில் சாலை தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே, மேல பஜார், கயத்தாறு பிரதான சாலை, தேரடி அருகே, காந்தி மைதானம், 8வது பலி பீடம், எட்டயபுரம் சாலை, பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சுமார் 17 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வர்த்தக சங்கம் சார்பில் பொருத்தப்பட்டன. இதற்குரிய கட்டுப்பாட்டு அறை கழுகுமலை காவல் நிலைய வளாகத்தில் செயல்பட்டது. இதனால் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்திருந்தன. இந்நிலையில் கழுகுமலை பேரூராட்சி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 17 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகிவிட்டன. கயத்தாறு பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, மேல பஜார் ஆகிய இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர் கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கழுகுமலையை சேர்ந்த மக்கள் கூறுகையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால், மதுபோதையில் சாலைகளில் பிரச்னைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது. ஆனால் ஓராண்டில் அனைத்து கேமராக்களும் பழுதாகி கிடக்கின்றன. 3 இடங்களில் கேமராக்களை எடுக்க வேண்டிய நிலை உரு வாகிவிட்டது. இந்நிலையில் கழுகுமலை பகுதியில் இருசக்கர வாகன திருட்டு அதிகரித்துள்ளது. காவல் துறையினர் சிரத்தை எடுத்து ரோந்து பணிகளில் ஈடுபட்டாலும், அவ்வப்போது மோட்டார் சைக்கிள் திருடு போவது வாடிக்கையாக உள்ளது. எனவே காவல்துறையின் 3வது கண் என்று கூறப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post கழுகுமலை பேரூராட்சியில் பழுதாகி காட்சிப்பொருளான சிசிடிவி கேமராக்கள் சீரமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai municipality ,Kalkumalai ,Dinakaran ,
× RELATED கழுகுமலையில் சுகாதார வளாகம் திறப்பு விழா