×

லாரிகள் செல்வதால் பல்வேறு பாதிப்பு வாங்கல் பகுதியில் கடையடைப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் கடைவீதியின் வழியாக மணல் லாரிகள் செல்வதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி கடைவீதியினர் நேற்று ஒரு நாள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியின் பின்புறம் காவிரி ஆறு செல்கிறது. இந்த காவரி ஆற்றை ஒட்டி சில பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்படுகிறது. இதே போல், வாங்கல் பகுதியை அடுத்துள்ள மல்லம்பாளையம் பகுதியிலும் மணல் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு, கொண்டு செல்லப்படும் பெரும்பாலான லாரிகள் வாங்கல் கடைவீதியின் வழியாக சென்று வருகிறது.வாங்கல் கடைவீதி குறுகலான பகுதியாக உள்ளது. கடைவீதியின் இரண்டு பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களும், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன.

கடைவீதியின் வழியாக தொடர்ந்து மணல் லாரிகள் செல்வதால் சாலை மோசமடைவதோடு, பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வந்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடைவீதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மணல் லாரிகளை மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை, கடைவீதியின் வழியாக மணல் லாரிகள் செல்வதை கண்டித்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, அதன்படி கடைவீதியில் நேற்று காலை முதல் 60க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து, வாங்கல் மோகனூர் காவிரி ஆற்றுப்பாலம் முன்பு குவிந்த பொதுமக்களில் சிலர், அந்த வழியாக வந்த மணல் லாரிகளை தடுத்து நிறுத்தியும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், காவிரி ஆற்றுப்பாலத்திலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில், சமரசம் ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 

The post லாரிகள் செல்வதால் பல்வேறு பாதிப்பு வாங்கல் பகுதியில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Wangal ,street ,Karur district ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் பணிகள் தொடக்கம்...