×

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்திய 138 டன் ரேஷன் அரிசி, 28,900 லிட்டர் டீசல் பறிமுதல்: சிவில் சப்ளை சிஐடி போலீசார் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 138 டன் ரேஷன் அரிசி மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 28,900 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிவில் சப்ளை சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 7 ம் தேதி வரை சிவில் சப்ளை சிஐடி போலீசார் அதிரடி சிறப்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சென்னை மண்டலத்தில் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் டீசல் இறக்கி விற்பனை செய்ய முயன்ற கனரக வாகனத்துடன் 28,900 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட மணச்சநல்லூர் பகுதியில் கடந்த 4ம் தேதி தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 5ம் தேதி கோவை மாவட்டம் சூளூர் அருகே உள்ள அரசூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 28 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சென்னை மண்டலத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மண்டலத்தில் 41 வழக்குகள் பதிவு செய்ப்பட்டு 66 டன் ரேஷன் அரிசி மற்றும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மண்டலத்தில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 28,900 லிட்டர் டீசல் மற்றும் 138 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிவில் சப்ளை சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்திய 138 டன் ரேஷன் அரிசி, 28,900 லிட்டர் டீசல் பறிமுதல்: சிவில் சப்ளை சிஐடி போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Civil Supply CID ,Chennai ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...